சென்னை விஐடி பல்கலைக்கழக தினவிழா சிறந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.60 லட்சம் பரிசுத்தொகை, விருது: நீதிபதி சுந்தர் மோகன் வழங்கினார்

சென்னை: சென்னை விஐடி பல்கலைக்கழக தினவிழாவில் படிப்பு, வருகை பதிவேடு, விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு ரூ.60 லட்சம் பரிசுத்தொகை மற்றும் விருதுகளை நீதிபதி சுந்தர் மோகன் வழங்கினார். சென்னை விஐடி பல்கலைக்கழக தினவிழா, விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன், கவுரவ விருந்தினராக ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய இணை இயக்குநரும், விஐடி முன்னாள் மாணவருமான சி.தாமோதரன் ஆகியோர் பங்கேற்றனர். விஐடி துணை தலைவர் சேகர் விசுவநாதன், நிர்வாக இயக்குநர் சந்தியா பென்டா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை விஐடி இணை துணை வேந்தர் ஜி.தியாகராஜன் வரவேற்று, ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி.விசுவநாதன் பேசுகையில், “இன்றளவும் இந்தியாவில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை 27 சதவீதமாகவே உள்ளது. ஆனால் தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மாணவர் சேர்க்கை 100 சதவீதமாக உள்ளது. இதற்கு காரணம் அந்த நாடுகளில் மாணவர்களின் பல்கலைக்கழகம் வரையிலான கல்வி செலவை அரசே ஏற்கிறது. தனியார் நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் கல்வி செலவை அரசை ஏற்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நமது நாடு பன்முகத்தன்மை, சமத்துவமின்மை கொண்டுள்ளது. கல்வியால் மட்டுமே சமத்துவத்தை பெற முடியும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9 சதவீதம் மட்டுமே கல்விக்காக செலவிடப்படுகிறது. இன்னும் அதிகரிக்க வேண்டும். ஊழல், வரி ஏய்ப்பு, கருப்பு பணம் போன்றவை இந்தியாவின் தேசிய நோயாக உள்ளது. ஒவ்வொரு விஐடி மாணவனும் தங்களுடைய நற்பண்புகளின் மூலம் நாட்டுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும்,” என்றார்.

சிறப்பு விருந்தினர் நீதிபதி சுந்தர் மோகன் பேசுகையில், “மாணவர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில், மற்றவர்களால் மதிக்கப்படும் நபராக மாறுவீர்கள். தோல்விகளுக்கு நியாயம் கூறுவதற்கு பதிலாக அதற்கான காரணத்தை தேட முயற்சி செய்யுங்கள். உங்களை எப்போதும் உங்கள் இலக்கிற்காக தயார்படுத்திக்கொண்டே இருங்கள். வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரும். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்,” என்றார். பின்னர், கவுரவ விருந்தினர் சி.தாமோதரன், விஐடி துணை தலைவர் சேகர் விசுவநாதன் ஆகியோரும் பேசினர். வகுப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், 100 சதவீதம் வருகை பதிவு கொண்ட மாணவர்களுக்கும் விருது மற்றும் ரூ.60 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. நிறைவாக, சென்னை விஐடி கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் நன்றி கூறினார். விழாவில், வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

The post சென்னை விஐடி பல்கலைக்கழக தினவிழா சிறந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.60 லட்சம் பரிசுத்தொகை, விருது: நீதிபதி சுந்தர் மோகன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: