100 சதவீதம் வாக்களிக்க பட்டு கைத்தறி ஆடையில் தேர்தல் சின்னம் கலெக்டர் பாராட்டு ஆரணி நெசவாளரின் விழிப்புணர்வு முயற்சி

திருவண்ணாமலை, ஏப்.11: தேர்தல் விழிப்புணர்வு வாசகத்தை பட்டு கைத்தறி ஆடையில் நெசவு செய்ததை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு பாராட்டினார். திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தொடர் விழிப்புணர்வு முயற்சிகள் நடந்து வருகிறது. அதன்படி, ஆரணி அடுத்த அத்திமலைப்பட்டு அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் இடம் பெற்ற பட்டு கைத்தறி ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்திமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்த கைத்தறி நெசவாளர் பெருமாள் என்பவர், கடந்த 25 நாட்களாக இதனை நெசவு செய்துள்ளார். பட்டு ஆடையில், பாராளுமன்ற தேர்தல் 2024ல் நமது இலக்கு 100 சதவீத வாக்குப்பதிவு எனும் வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும், தேசிய கொடியின் வண்ணம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சின்னம் ஆகியவையும் பட்டு ஆடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் விழிப்புணர்வு வாசகம் மற்றும் தேர்தல் சின்னம் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ள பட்டு கைத்தறி ஆடையை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். மேலும், இந்த புதிய முயற்சியை மேற்கொண்ட கைத்தறி சங்கத்திற்கும், கைத்தறி நெசவாளருக்கும் பாராட்டு தெரிவித்தார். இதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் ரிஷப், கைத்தறித்துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன், கைத்தறி ஆய்வாளர் ஜெகதீசன், கைத்தறி அலுவலர் மோகன்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post 100 சதவீதம் வாக்களிக்க பட்டு கைத்தறி ஆடையில் தேர்தல் சின்னம் கலெக்டர் பாராட்டு ஆரணி நெசவாளரின் விழிப்புணர்வு முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: