வேம்பாரில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் நாடாளுமன்ற தேர்தல் 2வது சுதந்திர போர்

*கனிமொழி எம்பி பேச்சு

குளத்தூர் : தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி எம்பி, நேற்றிரவு வேம்பாரில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு அவர் பேசுகையில், இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது வெற்றி திமுகவுக்கு தான் என்பது உறுதியாகி விட்டது.

முதல்வர் கூறியதுபோல், இந்த தேர்தல் என்பது 2வது சுதந்திர போர். தமிழகத்தில் இருக்கும் நமது நிதியை ஜிஎஸ்டி என கூறி எடுத்துச் சென்று பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிகளவு நிதி கொடுக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு முறையாக நிதி திருப்பி கொடுப்பதில்லை.

மழை வெள்ளத்துக்கு நிவாரணம் கேட்டு கொடுக்காததால் முதல்வர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாஜவை எதிர்த்து கேள்வி கேட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் 2 பேர் சிறையில் உள்ளனர். யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. விவசாயிகள் வங்கி கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். கல்விக்கடன் ரத்து இல்லை.

ஆனால், பெரிய பணக்காரர்களுக்கு சுமார் ரூ.15 லட்சம் கோடி கார்ப்பரேட் வங்கி கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கிகளில் உள்ள ஏழை மக்கள் கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லையென ரூ.21 ஆயிரம் கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஒன்றிய பாஜ ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மக்களை பிரித்து பிரச்னைகளை, கலவரங்களை உருவாக்கி வாக்கு வாங்கி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு இங்கு ஓட்டு நோட்டாவுக்கு கீழே தான். இதை யாரும் பிரதமருக்கு சொல்லவில்லை. இந்தி படிக்கக் கூறிய பிரதமருக்கு தேர்தல் வந்தவுடன் தமிழ் படிக்க ஆசை வந்து விட்டது. தேர்தலுக்குப் பிறகு அவர் சும்மாதான் இருப்பார். அதனால் முதல்வரிடம் கூறி தமிழ் சொல்லிக் கொடுக்க ஒரு வாத்தியார் அனுப்பி வைப்போம்.

அண்ணாமலை தமிழனே இல்லை. கடைசி வரை கன்னடனாக வாழ விரும்புகிறேன் எனக் கூறிவிட்டார். அவர் சொல்லிக் கொடுத்து பிரதமர் திருக்குறளை திருக்குறள் மாதிரியே சொல்ல மாட்டேங்கிறார். தூத்துக்குடி தொகுதியில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என முன்னெச்சரிக்கையாக இங்கு பாஜ போட்டியிடவில்லை. ஒன்றியத்தில் ஆட்சிக்கு வரப்போவது இந்தியா கூட்டணிதான்.

வேம்பார் பகுதி குடிநீர் பிரச்னையை போக்க ரூ.514 கோடியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. விரைவில், குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.பிரசாரத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

The post வேம்பாரில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் நாடாளுமன்ற தேர்தல் 2வது சுதந்திர போர் appeared first on Dinakaran.

Related Stories: