புதுக்கோட்டையில் குடிநீர் கேட்டு 2வது நாளாக மறியல்

 

புதுக்கோட்டை, ஏப்.10: புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட புதுத் தெருவில் முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி இரண்டாவது நாளாக அந்த பகுதி மக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுக்கோட்டை திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட புதுத்தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்ப மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அவர்களுக்கு குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டி அவர்கள் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் நேற்று மாலையே குடிநீர் வினியோகம் செய்யப்படும் என கூறியதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை முறையான குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டியும் குடிநீர் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறியும் இன்று புதுத்தெருமக்கள் புதுக்கோட்டை திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி ஒன்றையும் சிறை பிடித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் உடனடியாக தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் குடிநீர் குழாய் மூலம் காவிரி கூட்டு குடிநீரை மாலைக்குள் முறையாக வழங்குவதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

The post புதுக்கோட்டையில் குடிநீர் கேட்டு 2வது நாளாக மறியல் appeared first on Dinakaran.

Related Stories: