இன்னும் 9 நாளில் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம்: மு.க.ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் முற்றுகை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பிரதமர் மோடி நேற்று ரோடு ஷோவில் பங்கேற்றார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில் பிரசாரத்திற்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. அதாவது 17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் ஓய்கிறது.

இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து மாநில அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் தேசிய தலைவர்களும் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜவை பொறுத்தவரை பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே 6 முறை தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதேபோல் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, அனுராக் தாகூர் உள்ளிட்ட அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு ஒன்றிய அமைச்சர்கள், பாஜ ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் தமிழகத்தில் பிரசாரத்திற்காக அடுத்தடுத்து வர உள்ளனர்.

இந்நிலையில் பாஜ மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி 7வது முறையாக நேற்று தமிழகம் வந்தார். இதற்காக அவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை 6.05 மணியளவில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவர் தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு வந்தார். அங்கு பாஜ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரோடு ஷோவில் பங்கேற்றார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த பேரணி நடைபெற்றது. அப்போது பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

பேரணியை முடித்து கொண்டு சென்னை கிண்டி ராஜ்பவனில் பிரதமர் மோடி இரவு தங்கினார். தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு செல்கிறார். அங்கு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். பின்னர் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு செல்கிறார். அங்கிருந்து, மேட்டுபாளையம் செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். அப்போது நீலகிரி பாஜ வேட்பாளர் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து வரும் 13, 14ம் தேதியும் தமிழகத்தில் மோடி பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் நேற்று யுகாதி பண்டிகை என்பதால் விடுமுறை. அனைவரும் வீட்டில் இருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் காலை முதல் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இரவு வரை தொடர்ச்சியாக இந்த பிரசாரம் நீடித்தது. இதனால், தமிழகம் முழுவதும் எல்லா தெருக்களிலும் எங்கு திரும்பினாலும் வேட்பாளர்களின் பிரசாரமாக காட்சியளித்தது. வேட்பாளர்கள் நூதன முறையில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். எங்கும் அரசியல் கட்சிகளின் கொடிகளாக காட்சியளித்தது. இவர்கள் ஒருபுறம் இருக்க தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் நேற்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை, சிவகங்கை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அவரின் எழுச்சியுரையை கேட்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். மறுபுறம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம், கள்ளக்குறிச்சியில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதே போல, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியிலும், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையிலும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கடலூர், சிதம்பரம் தொகுதியிலும், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பெரம்பலூர், திருச்சியிலும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தேனி, திண்டுக்கல் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேனியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் போட்டியிடும் முகமது முபாரக்கை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மயிலாடுதுறையில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதே போல பாமக தலைவர் அன்புமணி தர்மபுரி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூர், நீலகிரி, கோவை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முற்றுகையிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் நேற்று காலை முதல் அனல் பறந்தது. அதே போல பிரதமர் உள்ளிட்ட தேசிய தலைவர்களும் தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வந்ததால் பிரசாரம் மேலும் தீவிரமடைந்தது.

* அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முற்றுகையிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
* இதனால் தேர்தல் களம் நேற்று காலை முதல் அனல் பறந்தது.
* பிரதமர் உள்ளிட்ட தேசிய தலைவர்களும் தமிழகத்திற்கு வந்ததால் பிரசாரம் மேலும் தீவிரமடைந்தது.

The post இன்னும் 9 நாளில் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம்: மு.க.ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: