தேர்தலுக்காக அடிக்கடி தமிழகம் வரும் பிரதமர் மோடி 10 ஆண்டாக தூங்கிக்கொண்டு இருந்தாரா? என்னதான் முயன்றாலும் 5 பர்சன்ட்டை கூட தாண்டாதுங்க… அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து நேற்று மாலை புளியந்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகம் வரலாம். அதனால், ஒரு தாக்கமும் இருக்காது. பொதுவாக தமிழகத்தில் தேசிய கட்சிகளை 1967ம் ஆண்டே மக்கள் முடித்து வைத்து விட்டனர். அதன் பிறகு தேசிய கட்சிகளுக்கு வாய்ப்பு கிடையாது. முந்தைய காலகட்டங்களில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜிவ்காந்தி 13 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். அப்போது, மூப்பனார் தலைவராக இருந்தார். பல்வேறு பிரசாரங்களை அவர்கள் செய்த போதும் 23 சீட்டுகளை மட்டுமே பெற முடிந்தது.

அதேபோல், தற்போது தேர்தல் நடைபெறும் நேரத்தில் மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் பாஜ இங்கு கால் ஊன்ற முடியாது. அவர்களுடைய வாக்கு சதவீதம் 4 முதல் 5 சதவீதமாகத் தான் இருக்கும். அதற்கு மேல தாண்டுவது மிகவும் கஷ்டம். தற்போது அடிக்கடி தமிழகத்துக்கு வரும் மோடி, கடந்த 10 ஆண்டு காலமாக தூங்கிக் கொண்டு இருந்தாரா?. இந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை தருவோம் என மோடி அரசு கூறியது. கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை தந்தீர்கள் என்றார்.

The post தேர்தலுக்காக அடிக்கடி தமிழகம் வரும் பிரதமர் மோடி 10 ஆண்டாக தூங்கிக்கொண்டு இருந்தாரா? என்னதான் முயன்றாலும் 5 பர்சன்ட்டை கூட தாண்டாதுங்க… அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: