நாதக நிர்வாகி கடை உட்பட 2 நகைக்கடைகளில் ஐடி ரெய்டு சேத்துப்பட்டில் பரபரப்பு

சேத்துப்பட்டு, ஏப்.6: சேத்துப்பட்டில் நாதக மாவட்ட நிர்வாகி நகை கடை உட்பட 2 நகைக்கடைகளில் நேற்று தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு நகரில் ஏராளமான நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில், செஞ்சி சாலையில் நாம்தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் நகைக்கடையும், வந்தவாசி சாலையில் பிரபலமான நகைக்கடையும் உள்ளன. இந்த கடைகளில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் மற்றும் வருமான வரித்துறை ஆணையாளர் சுப்பிரமணி தலைமையில் 20 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக நகைகள் ஏதாவது மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதா? நகைக்கடையில் வருமான வரி முறையாக கட்டப்பட்டுள்ளதா? ஏதாவது மறைக்கப்பட்டுள்ளதா? வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா? என தீவிர விசாரணை நடத்தினர். நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. நகரின் முக்கிய நகைக்கடைகளில் திடீர் சோதனை நடந்ததால் மற்ற கடைக்காரர்கள் உடனே கடைகளை மூடிவிட்டு, கடைகளின் பக்கம் தங்களது பார்வையை செலுத்தி கொண்டிருந்தனர். நாதக நிர்வாகி கடை உட்பட 2 நகைக்கடைகளில் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் சேத்துப்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post நாதக நிர்வாகி கடை உட்பட 2 நகைக்கடைகளில் ஐடி ரெய்டு சேத்துப்பட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: