பேரூராட்சிக்கு சொந்தமான தெருவை தனிநபருக்கு பட்டா மாற்றி விற்பனை சேத்துப்பட்டு மக்கள் அதிர்ச்சி 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடு

சேத்துப்பட்டு, ஜூன் 11: கடந்த அதிமுக ஆட்சியின்போது சேத்துப்பட்டு பேரூராட்சிக்கு சொந்தமான தெருவை தனிநபர் பெயரில் பட்டா மாற்றி, வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சி 12 வார்டுகளை கொண்டுள்ளது. இங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்கள் சுமார் 300 அடி முதல் 1000 அடி வரை அகலம் கொண்டது. தெருவின் நடுவில் அனைத்து தெருக்களை இணைக்கும் இணைப்பு சாலையும் உள்ளது. இது அரசு பதிவேட்டிலும் உள்ளது. இந்நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில் அண்ணா தெரு, ஜாகீர் உசேன் தெரு, கடை தெரு (போலீஸ் ஸ்டேஷன் தெரு) வ.உ.சி தெரு, பாத்திமா தெரு ஆகியவற்றை இணைக்கும் சுமார் 7 அடி அகலம் கொண்ட குறுக்கு தெரு தற்போதும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், கடை தெருவில் இருந்து ஜாகீர் உசேன் தெருவை இணைக்கும் 7 அடி அகலம் 85 அடி நீளமுள்ள குறுக்கு தெரு முட்புதருடன் காணப்பட்டது.

இந்த தெருவில் சாலை வசதி, மின்விளக்கு வசதி ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டு பணி செய்ய கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான அதிகாரிகள் அளவீடு செய்ய முயன்றனர். அப்போது, அருகே உள்ள வீட்டுமனை உரிமையாளர் இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது எனக்கூறி தகராறு செய்தார். இதுகுறித்து விசாரித்தபோது, அந்த குறுக்கு தெருவை, அங்குள்ள தனிநபருக்கு வருவாய்த்துறையினர் கடந்த 2018ம் ஆண்டு முறைகேடாக பட்டா மாற்றி கொடுத்துள்ளதும், அதனை வேறொருக்கு 2023ம் ஆண்டு விற்பனை செய்திருப்பதும் தெரியவந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் நடந்துள்ள இந்த முறைகேடு பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், அந்த குறுக்கு தெரு தனிநபர் பெயரில் பட்டா உள்ளதாகவும், அதனை ரத்து செய்து தருமாறும் சேத்துப்பட்டு தாசில்தார் சசிகலாவுக்கு கடந்த மாதம் 15ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது.

The post பேரூராட்சிக்கு சொந்தமான தெருவை தனிநபருக்கு பட்டா மாற்றி விற்பனை சேத்துப்பட்டு மக்கள் அதிர்ச்சி 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடு appeared first on Dinakaran.

Related Stories: