பழைய பொருட்கள் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து 10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் போராடி அணைப்பு செய்யாறு அருகே மின்கம்பியில் லாரி உரசியதால்

செய்யாறு, ஜூன் 15: செய்யாறு சிப்காட் அருகே மின்கம்பியில் லாரி உரசியதால் பழைய கழிவுபொருட்கள் சேமிப்பு குடோனில் தீப்பொறி விழுந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 10 தீயணைப்பு வாகனங்ளில் வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அழிஞ்சல் பட்டு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட செல்லபெரும்புலிமேடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(39), இவர் அருகே உள்ள சிப்காட் கம்பெனிகளில் இருந்து தேவையற்ற இரும்பு, தகரம், பிளாஸ்டிக், செம்பு, மின் ஒயர்கள், கேபிள்கள், காகித அட்டைகள் உள்ளிட்ட கழிவு பொருட்களை வாங்கி வந்து அதனை தரம் பிரித்து, சில கம்பெனிகளின் தேவைக்கேற்ப வாரந்தோறும் லோடு ஏற்றி விற்பனை செய்து வருகிறார். இதற்காக கிராமத்தின் அருகே பெரிய அளவிலான குடோன் வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அவ்வழியாக வந்த லாரி மின் ஒயரில் உரசியது. இதனால் கழிவு பொருட்கள் சேமிப்பு குடோனில் தீப்பொறி விழுந்து தீப்பற்றியது. காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. அந்த குடோனில் காகித அட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு இருந்ததால் கரும்புகை வெளியேறியது. மேலும் எரியும் பொழுது குடோனில் இருந்து லேசாக வெடி சத்தமும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

மேலும் தகவலறிந்த செய்யாறு சப்-கலெக்டர் பல்லவி வர்மா, வெம்பாக்கம் தாசில்தார்கள் துளசிராமன், பெருமாள், வருவாய் ஆய்வாளர் அருள், விஏஓ சுவாமிநாதன், செய்யாறு இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், மற்றும் தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வந்தவாசி. பெரணமல்லூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருவண்ணாமலை. ஆரணி, போளூர் ஆகிய இடங்களில் இருந்து 10 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவுபொருட்கள் சேதம் ஆனதாக கூறப்படுகிறது. பயங்கர தீ விபத்தில் கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post பழைய பொருட்கள் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து 10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் போராடி அணைப்பு செய்யாறு அருகே மின்கம்பியில் லாரி உரசியதால் appeared first on Dinakaran.

Related Stories: