தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறையில்லை: வேலையின்மை, விலைவாசி உயர்வு தான் மோடியின் சாதனை; ப.சிதம்பரம் பேச்சு

சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து செங்குன்றத்தில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஏற்பாட்டில் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:
பாஜவில் வாஜ்பாயும் இருத்திருக்கிறார். பல நன்மைகள் செய்தார், சில தவறுகளும் செய்திருக்கலாம். மோடி எந்த நன்மைகளை செய்யவில்லை. இந்தியாவை இந்துத்துவா நாடாக, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே தலைவர் என சர்வாதிகாரப் போக்குடன் அறிவிக்க உள்ளார். மாநில கட்சிகளை ஒடுக்க வேண்டும், காங்கிரஸை ஒழிக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் திட்டம்.

அரசியல் கட்சிக்கு வருமானம் கிடையாது, ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காங்கிரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ரூ.3500 கோடிக்கு வட்டி வழக்கு காங்கிரஸ் மீது போடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை முடக்க வேண்டும், என நினைக்கின்றனர். முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தேர்தலில் மிகுந்த கவனத்துடன் மக்கள் வாக்களிக்க வேண்டும். மோடி அரசு, அதிமுக அரசு, திமுக அரசு ஒப்பிட்டு பாருங்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ.6000 கோடி பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டது. 100 நாள் திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ்.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் கூலி ரூ.400ஆக உயர்த்தப்படும். வங்கியில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ். மோடி அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை. கச்சா எண்ணெய் விலை குறைகிறது, பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் கார்பரேட் முதலாளிகளுக்கு 10 லட்சம் கோடி சலுகை அளித்து அதில், ரூ.2.5 லட்சம் கோடியை ஈட்டுகிறார்கள். உங்களால் முடியவில்லை என்றால் ஒதுங்கி விடுங்கள். முடிந்தவர்கள் ஆட்சி செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* விவசாயிகளுக்கு மோடி அரசு செய்து வரும் அநீதி: ஒரு லட்சம் பேர் தற்கொலை; பட்ஜெட்டில் நிதி குறைப்பு; கடன் தள்ளுபடி இல்லை; புட்டுப்புட்டு வைக்கிறார் அமைச்சர்
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: 2014 தேர்தலின் போது பேசிய மோடி, ‘‘நம் விவசாயிகள், கையில் கயிறு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது; விவசாயிகள் அதிக கடன்களை வாங்கக்கூடாது; கடன்காரர்கள் கதவுகளைத் தட்ட வழிவகுக்கக் கூடாது; விவசாயிகளுக்கு கடன் கொடுப்பது அரசு மற்றும் வங்கிகளின் பொறுப்பு அல்லவா? விவசாயிகளின் நிலைமை மேம்பட்டால் அது அவர்களுக்கு மட்டும் முன்னேற்றம் இல்லை, வயல்களின் வேலை செய்யும் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்’’ என உணர்ச்சித்ததும்ப பேசினார். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடிய ஒரே தலைவர், மோடி தான், என அப்பாவி மக்கள் நம்பும் அளவுக்கு நடித்து காட்டினார்.

ஆனால் இவரது பேச்சுக்கும் ஆட்சிக்கும் இம்மியளவும் சம்பந்தமில்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது, தினசரி 30 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். ஆனால் பாஜ, தனது போலி செய்தி பரப்பும் கட்சிக்காரர்களை வைத்து, மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை இல்லை என பரப்புகின்றனர்.
விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, இடுப்பொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராடிய போது, அவர்களின் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 23 வயது இளம் விவசாயி சுட்டு கொல்லப்பட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் 177 சமூக வலைதள பக்கங்களை முடக்க எக்ஸ்-தளத்திற்கு பாஜ அரசு அறிவுறுத்தி, அவற்றை முடக்கச் செய்தது. இந்திய அரசின் இந்த நடவடிக்கையில் உடன்பாடு இல்லை என்றும், இது கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாகவும் எக்ஸ்-நிறுவனம் கருத்து தெரிவித்தது. கடந்த 4 ஆண்டுகளில் விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 4.4%ல் இருந்து 2.5% ஆக குறைக்கபட்டுள்ளது. மட்டுமல்லாமல், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையையாவது பாஜ அரசு விவசாயிகளின் நலனுக்காக சரியாக பயன்படுத்தியிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

முந்தைய, காங்கிரஸ் ஆட்சியில், விவசாயிகளின் ரூ.72,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், பாஜ அரசு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.25 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. அது போல கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்துள்ளது. அனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவோ சலுகை அளிக்கவோ மனம் வரவில்லை. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசின் செயல்பாடுகள் விவசாயிகளுக்கும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் எதிரானதாகவே இதுவரை இருந்துள்ளது.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

* இதானா உங்க டக்கு… தேர்தல் தேதி அறிவிச்சு 15 நாளுக்கு பிறகு அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஆனால், இதுநாள் வரை தேர்தல் அலுவலகம் திறக்கவில்லை. தி.மு.க., பா.ம.க., நா.த.க. கட்சிகள் அனைத்தும் தேர்தல் அலுவலகம் திறந்து கட்சியினர் தினமும் வந்து பிரசார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, அதிமுக திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் தனது அலுவலகத்தை தேர்தல் அலுவலகமாக மாற்றி நேற்று திறப்பு விழா நடத்தினார். முன்னாள் அமைச்சர் வளர்மதி காலை 11 மணிக்கு வருவதாக அறிவித்த நிலையில் காலை 9 மணிக்கே அவர் வந்து அலுவலகத்தை திறந்து வைத்துவிட்டு சென்று விட்டார்.

* பணம் எப்போ வரும்?
தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு பிரசாரம் தொடங்கி விட்ட பிறகும் கூட இன்னும் கட்சி நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்ட பணம் கிளை செயலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்று கட்சியின் பொறுப்பாளர்கள் சிலர் வளர்மதியிடம் புகார் கூறினர். உரிய நேரத்தில் வந்து சேரும் என்று வளர்மதி உறுதியளித்தார்.

The post தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறையில்லை: வேலையின்மை, விலைவாசி உயர்வு தான் மோடியின் சாதனை; ப.சிதம்பரம் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: