ரெட்டிச்சாவடி அருகே அரசு ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை

ரெட்டிச்சாவடி, ஏப். 3: ரெட்டிச்சாவடி அருகே அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த உச்சிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி லதா (55). இவர்களது மகன் விக்னேஷ். நடராஜ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை பாதிப்பால் இறந்துவிட்டார். நடராஜ் இறந்ததால் வாரிசு அடிப்படையில் அவரது மகன் விக்னேஷுக்கு அரசு பணி வழங்கப்பட்டதால், ஈரோடு மாவட்டம் பவானியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். லதா உச்சிமேட்டில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் விக்னேஷ் சென்னையில் உள்ள மாமா வீட்டிற்கு வருவதாக தாயாரிடம் தொலைபேசியில் கூறியுள்ளார். மகனை பார்ப்பதற்காக லதா வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தம்பி வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் உச்சிமேட்டில் உள்ள தனது வீட்டின் கேட் கதவுகள் மற்றும் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக நேற்று லதா வீட்டின் அருகில் உள்ளவர்கள் போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் உடனடியாக லதா சென்னையில் இருந்து உச்சிமேடு கிராமத்திற்கு வந்தார். பின்னர் வீட்டை பார்த்தபோது வீட்டின் முன் வாசலில் உள்ள கேட் மற்றும் மெயின் கதவின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் மற்றும் ஆடைகள் சிதறிக் கிடந்தன. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை, பணம், அரை கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் லதா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், எஸ்.ஐ. ஆனந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்ப நாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அரசு ஊழியர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ரெட்டிச்சாவடி அருகே அரசு ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: