நிதி, பாதுகாப்பு, மலிவு விலையை அழித்து ரயில்வேயை சீரழித்தது பாஜ அரசு: மல்லிகார்ஜூன கார்கே கடும் தாக்கு

புதுடெல்லி: ‘நிதி, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் மலிவு விலையை அழித்து ரயில்வேயை மோடி அரசு சீரழித்து நாசமாக்கி இருக்கிறது’ என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மோடி அரசின் கீழ் ரயில்வே சீரழிகிறது. ரயில்கள் சுய விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

மோடியின் 3டி செல்பி பாயிண்ட்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்கள் தொடக்க விழாவில் பச்சைக் கொடி காட்டுவதற்கு பின்னால் பாஜவின் முழுமையான அக்கறையின்மையும், புறக்கணிப்பும், சீரழிக்கும் கதைகளும் மறைந்துள்ளன. மோடி அரசு ரயில்வேயின் நிதி, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் மலிவு விலையை அழித்து நாசமாக்கி விட்டது. 2012-13ல் 79 சதவீதமாக இருந்த மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ்களின் எண்ணிக்கை 2018-19ல் 69.23 சதவீதமாக குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ரயில்வேலியை மீண்டும் இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக்கி புத்துயிர் ஊட்டும். ரயில்வே தொடர்பாக பாஜ அரசிடம் 7 கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

 ரயில்வேயில் 3 லட்சம் காலி இடங்களை பாஜ அரசு ஏன் நிரப்பவில்லை? நாட்டில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் இடஒதுக்கீடு பெறக்கூடிய எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இடபிள்யுஎஸ் மக்களுக்கு எதிரானதா பாஜ?

 2013-14ல் ஒரு கிமீக்கு ஒரு பயணியின் சராசரி கட்டணம் 0.32 பைசாவாக இருந்தது. இது 2023ல் 0.66 பைசாவாக இருமடங்காக அதிகரித்தது ஏன்? 2017 முதல் 2021 இடையே ரயில் தொடர்பான இறப்புகள் 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி இருப்பது உண்மை இல்லையா? இதில் 300 விலைமதிப்பற்ற உயிர்களை பறித்த பாலசோர் விபத்து சேர்க்கப்படவில்லை.

 கவாச் பாதுகாப்பு அமைப்பு வெறும் 2.13 சதவீத ரயில்களில் மட்டுமே இருப்பது உண்மை இல்லையா?

 கொரோனா காலகட்டத்தில் ஏன் முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ரயில் கட்டண சலுகைகளை அக்கறையின்றி ரத்து செய்தீர்கள்? இதன் மூலம் ஒரே ஆண்டில் மோடி அரசு ₹2,242 கோடி கொள்ளையடித்துள்ளது.

 சிஏஜி அறிக்கைப்படி ₹58,459 கோடியில் 0.7 சதவீதம் மட்டுமே ரயில் பாதை புதுப்பித்தலுக்குச் செலவிடப்பட்டது ஏன்? இதனால்தான், மோடி அரசு கூறிய வந்தே பாரத் அதிவேக ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 180 கிமீ வேகத்திற்குப் பதிலாக வெறும் 83 கிமீ வேகத்தில் மட்டுமே உள்ளது.

 ரயில்வேயை தனியார்மயமாக்கும் பெரும் திட்டத்தை தயாரித்து, அதை ஏற்கனவே தொடங்கி விட்டது உண்மை இல்லையா? மோடி அரசின் தேசிய ரயில்வே திட்டத்தின் (2021) படி, 2031ம் ஆண்டிற்குள் அனைத்து சரக்கு ரயில்களும் 750 ரயில் நிலையங்களும் (30%) தனியார்மயமாக்கப்பட உள்ளது.

 ரயில்வேக்கு நிதி ஒதுக்கீட்டை குறைந்தது உண்மை இல்லையா? இனி லாபத்தில் இயங்கும் அனைத்து ஏசி பெட்டிகளும் தனியார் மயமாக்கப்படும் என்று கூறி உள்ளார்.

The post நிதி, பாதுகாப்பு, மலிவு விலையை அழித்து ரயில்வேயை சீரழித்தது பாஜ அரசு: மல்லிகார்ஜூன கார்கே கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: