குடியிருப்புகளுக்கு பத்திரப்பதிவு செய்ய மறுப்பு; தேர்தல் புறக்கணித்து போராட்டம்: திருநீர்மலையில் பரபரப்பு

பல்லாவரம்: சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 700 வீடுகள் உள்ளன. தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இந்த குடியிருப்புவாசிகள் அவசர தேவைகளுக்காக வீடுகளை அடமானம் வைக்கவோ, விற்பனை செய்வதற்காகவோ பம்மல் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்துக்கு சென்றால், ‘’உங்களது குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதி திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது’’ என்று தெரிவித்து பத்திரப்பதிவு செய்ய மறுத்துவிடுவதாக தெரிகிறது.

இந்த நிலையில், குடியிருப்பு வாசிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை திரண்டனர். இதன் பின்னர் அவர்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து கைககளில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

குடியிருப்பு வாசிகள் கூறியதாவது;
நாங்கள் கடந்த 2013ம் ஆண்டு சுமார் 50 லட்சம் ரூபாய் வரை கொடுத்து வீடுகள் வாங்கி வசிக்கிறோம் அப்போது இந்த நிலம் தொடர்பாக எந்த வில்லங்கமும் இல்லை. வங்கியில் கடன் பெற்றுதான் வீடுகளை வாங்கியுள்ளோம். தற்போது கூட 50 ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்று போட்டு பார்த்தால் அதில் எவ்வித வில்லங்கமும் இல்லை என்றுதான் வருகிறது. அப்படி இருக்கையில் திடீரென பம்மல் பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் எங்களது குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று கூறி பத்திரப்பதிவு செய்ய மறுப்பது என்ன நியாயம்? கடந்த 2013ம் ஆண்டு குடியிருப்புகளை விற்பனை செய்ததற்கு எப்படி அனுமதித்தார்கள்? அப்போது கோயில் நிலம் என்று தெரியாதா?

இதுசம்பந்தமாக நீதிமன்றமோ, இந்து சமய அறநிலையத் துறையோ எந்தவொரு கடிதமும் வழங்கவில்லை. நாங்கள் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி ஆகியவற்றைசெலுத்தி வருகிறோம். எனவே, பொதுமக்களின் நலன் கருதி எங்களது வீடுகளை அடமானம் வைக்கவும் மறுவிற்பனை செய்யவும் பத்திரப்பதிவு செய்வதற்கு பம்மல் பத்திர பதிவுத்துறை அலுவலகம் முன்வரவேண்டும்.இல்லையெனில், குடியிருப்பு வளாகத்தில் மொத்தம் உள்ள 2000 வாக்காளர்களும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து, நாங்கள் யாருக்கும் ஓட்டுப்போட செல்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம். நாங்கள் மட்டுமின்றி, எங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் எங்களுக்கு ஆதரவாக இதே முடிவை எடுக்க உள்ளனர். தற்போது வரை சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இந்த தேர்தலை புறக்கணித்து, எங்களது எதிர்ப்பினை பதிவு செய்ய உள்ளோம்.இவ்வாறு தெரிவித்தனர்.

The post குடியிருப்புகளுக்கு பத்திரப்பதிவு செய்ய மறுப்பு; தேர்தல் புறக்கணித்து போராட்டம்: திருநீர்மலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: