பத்தனம்திட்டா அருகே லாரி மீது கார் மோதி ஆசிரியை, கள்ளக்காதலன் பரிதாப சாவு

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (36). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் அருகே தும்பமண் பகுதியிலுள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் அனுஜா ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவருக்கும், அருகிலுள்ள சாரும்மூடு பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவரான முகம்மது ஹாஷிம் (35) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.இந்த விவரம் அனுஜாவின் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதனால் கணவனுக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அனுஜா சக ஆசிரியர்களுடன் ஒரு பஸ்சில் திருவனந்தபுரத்திற்கு சுற்றுலா சென்றார். சுற்றுலா முடிந்து இரவில் அனைவரும் ஊருக்குத் திரும்பினர்.
நேற்று அதிகாலை 12.15 மணியளவில் அடூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த ஹாஷிம் தன்னுடைய காரை ரோட்டில் குறுக்கே நிறுத்தி பஸ்சை வழிமறித்தார். பஸ் நின்றவுடன் அதில் ஏறிய ஹாஷிம், அனுஜாவை இறங்கி வருமாறு கூறியுள்ளார்.முதலில் செல்ல மறுத்தபோதிலும் பின்னர் அனுஜா பஸ்சிலிருந்து இறங்கி அவருடன் காரில் சென்றுள்ளார். அப்போது, ஹாஷிமை தன்னுடைய சித்தப்பா மகன் என்று சக ஆசிரியைகளிடம் அனுஜா கூறியுள்ளார்.

அனுஜா காரில் ஏறிய சிறிது நேரத்திலேயே அடூர் பட்டாழிமுக்கு என்ற இடத்தில் வைத்து ஒரு லாரியுடன் கார் மோதியது. அதிவேகத்தில் வந்ததால் கார் சுக்கு நூறானது.உடனடியாக அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காரில் இருந்த இருவரையும் வெளியே எடுக்க முடியவில்லை.இதுகுறித்து தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மிகவும் சிரமப்பட்டு இருவரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் அனுஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹாஷிமை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.விபத்து குறித்து அடூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் இது எதிர்பாராமல் நடந்த விபத்தாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் ஹாஷிம் வேண்டுமென்றே காரை லாரி மீது மோதியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

கார் அதிவேகத்தில் சென்றதாகவும், பலமுறை காரின் முன்பக்க கதவு திறந்து அனுஜாவின் கால் வெளியே தெரிந்ததாகவும் அப்பகுதியினர் போலீசாரிடம் தெரிவித்தனர். அனுஜாவை கொல்வதற்காக ஹாஷிம் அதிவேகத்தில் காரை ஓட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post பத்தனம்திட்டா அருகே லாரி மீது கார் மோதி ஆசிரியை, கள்ளக்காதலன் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Related Stories: