பாஜ கூட்டணியில் சேர்ந்ததும் பிரபுல் பட்டேலை மோடி வாஷிங் மெஷின் சுத்தப்படுத்தி விட்டதா? விமானங்களை குத்தகைக்கு எடுத்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் சர்ச்சை

புதுடெல்லி: விமானங்களை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரபுல் பட்டேல் மீது தொடரப்பட்ட வழக்கில் எந்த முறைகேடும் நடக்க வில்லை என்று சிபிஐ அறிக்கை அளித்துள்ளது. அண்மையில் சரத்பவாரிடம் இருந்து பிரிந்து, அஜித் பவாருடன் பாஜ கூட்டணியில் சேர்ந்ததால், மோடியின் வாஷிங் மெஷின் பிரபுல் படேலை சுத்தமாக்கிவிட்டதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை இணைத்து என்சிஐஎல் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

அப்போது விமானங்களை குத்தகைக்கு எடுத்ததில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது விமானப்போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கட்சியை சேர்ந்த பிரபுல் பட்டேல் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனால் ஒன்றிய அரசுக்கு ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டது என்று கூறி சிபிஐ கடந்த 2017ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2023 ஜூலை வரை பிரபுல் பட்டேலுக்கு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு வந்தது. அவரது சொத்துக்கள் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் திடீரென நேற்று முன்தினம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் எந்தவித தவறும் நடக்கவில்லை என்று சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் தலைமையில் இயங்கிய வரை பிரபுல்பட்டேல் வழக்கை சந்தித்து வந்தார். விசாரணைக்கு சென்று வந்தார். அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. ஆனால் திடீரென அஜித்பவார் தலைமையில் தனி அணி உருவாகி மகாராஷ்டிராவில் பா.ஜ கூட்டணி அரசில் இணைந்த பிறகு, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பிரபுல் பட்டேல் தாவிய பிறகு, தற்போது திடீரென அவருக்கு நன்சான்றிதழ் சிபிஐ சார்பில் வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ கூட்டணியில் இணைந்ததால் மோடி வாஷிங் மெஷின் பிரபுல் பட்டேலை சுத்தம் செய்து விட்டதாக அனைத்து அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்துள்ளன. தேர்தல் நேரத்தில் சிபிஐ தாக்கல் செய்த இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* நாடு வெட்கப்படுகிறது ஆம்ஆத்மி விளாசல்
ஆம்ஆத்மி செய்தி தொடர்பாளர் ஜாஸ்மின் ஷா கூறியதாவது: ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தேர்தல் நன்கொடை கொடுத்தால் அவர்களை சுத்தமாக்கும் மிகப்பெரிய அரசியல் சலவை இயந்திரத்தை பாஜ கடந்த பத்து ஆண்டுகளில் உருவாக்கியுள்ளது. இந்த அடிப்படையில் தான் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ள தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் முகாம்) தலைவர் பிரபுல் படேலுக்கு சிபிஐயிடம் இருந்து நற்சான்றிதழ் கிடைத்துள்ளது. இதேபோல், மற்றொரு அரசியல்வாதியான சகன் புஜ்பால் சம்பந்தப்பட்ட வழக்கில், தொடர்புடைய கோப்பு காணவில்லை என்று கூறி அவரது ஜாமீன் மனுவை அமலாக்கத்துறை எதிர்க்கவில்லை.
மறுபுறம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மியின் 3 முக்கியத் தலைவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் விசாரித்து வரும் கலால் கொள்கை வழக்கில் ஒரு ஆதாரமும் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறை, சிபிஐ அரசியல்மயமாக்கப்பட்ட விதத்தை நாடு முழுவதும் பார்த்து வெட்கப்படுகிறோம். இதற்கு மக்கள் வரும் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* மன்மோகன்சிங்கிடம் பா.ஜ மன்னிப்பு கேட்க வேண்டும்
ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் சிங்கிடம் பாஜ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில்,’ மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து பாஜ கூச்சலிட்டது. இப்போது எந்த தவறும் நடக்கவில்லை என்று சிபிஐ தெரிவித்து விட்டது. எனவே மன்மோகன்சிங்கிடம் பாஜ மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.

The post பாஜ கூட்டணியில் சேர்ந்ததும் பிரபுல் பட்டேலை மோடி வாஷிங் மெஷின் சுத்தப்படுத்தி விட்டதா? விமானங்களை குத்தகைக்கு எடுத்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: