தேர்தல் நடத்தை விதிகள் மீறல் குறித்து சி-விஜில் செயலியில் 79,000 புகார்கள் பதிவு

புதுடெல்லி: மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகாரளிக்க சி-விஜில் செயலியை கடந்த 2018ம் ஆண்டு தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள், மதுபானம் விநியோகித்தல், திருமண மண்டபங்களில் விருந்து வைத்தல், மிரட்டல் விடுத்தல், வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவது உள்பட அனைத்து விதிமீறல்கள் தொடர்பாக சி-விஜில் செயலியில் புகார்களை பதிவு செய்யலாம். புகைப்படங்கள், நிகழ்நேர காணொலி வாயிலாக புகார் அனுப்பினால், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். 2024 மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி கடந்த 16ம் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலியில் இதுவரை 79,000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ இதுவரை 79,000க்கும் மேற்பட்ட புகார்கள் சி-விஜில் செயலில் பதிவாகி உள்ளன. மொத்த புகார்களில் 58,500க்கும் (73%) புகார்கள் சட்டவிரோத பதுக்கல், பேனர்கள் வைத்தல் தொடர்பானவை. பணம், பரிசு பொருள், மதுபானம் விநியோகம் குறித்து 1,400 புகார்கள் வந்துள்ளன. சொத்துகளை சேதப்படுத்தியதாக 2,454(3%) புகார்கள் வந்துள்ளன. துப்பாக்கிகளை காட்டி மிரட்டியதாக வந்த 535 புகார்களில் 529 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியது உள்பட குறிப்பிட்ட காலஅளவை மீறி பிரசாரம் செய்ததாக 1,000 புகார்கள் பதிவாகி உள்ளன.இதில் 99 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேர்தல் நடத்தை விதிகள் மீறல் குறித்து சி-விஜில் செயலியில் 79,000 புகார்கள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: