வேலையில்லா திண்டாட்டத்தை அரசால் தீர்க்க முடியாது என்பதா? காங்கிரஸ் கடும் கண்டனம்

புதுடெல்லி: வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட சமூக பிரச்னைகளை ஒன்றிய அரசால் தீர்க்க முடியாது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கூறியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் வௌியிட்ட “இந்திய வேலை வாய்ப்பு அறிக்கை 2024ல் “இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வௌியிட்டு பேசிய ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வர ராவ், “வேலையில்லா திண்டாட்டம் போன்ற சமூக பிரச்னைகளை அரசால் தீர்க்க முடியாது” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் ட்விட்டர் பதிவில், “2014ல் ஆட்சிக்கு வந்த மோடி, 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை தருவதாக வாக்குறுதி தந்தார். ஆனால் இளைஞர்களிடம் இருந்து 12 கோடிக்கும் அதிகமான வேலைகளை பறித்தார். இந்தியாவில வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 83 சதவீதம் பேர் இளைஞர்கள். தொழில் மற்றும் உற்பத்தி துறையில் பணியாற்றுவோர் கடந்த 2012 முதல் 26 சதவீதம் பேரே உள்ளனர். பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களின் பங்கு 2012ல் 42% இருந்த நிலையில், அது 2022க்குள் 37 சதவீதமாக குறைந்து விட்டது. மோடி அரசின் அலட்சியத்தின் சுமைகளை இந்திய இளைஞர்கள் சுமந்து கொண்டுள்ளனர். அதிகரிக்கும் வேலையின்மை அவர்களின் எதிர்காலத்தை அழித்து விட்டது. ஆனால், மோடி அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனைத்து பிரச்னைகளையும் அரசு தீர்க்க முடியாது என்று சொல்லி தன் அன்பான தலைவரை பாதுகாக்கிறார்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து கார்கே தன் ட்விட்டர் பதிவில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள சுமார் 30 லட்சம் ஒன்றிய அரசு பதவிகளை நிரப்புவது போன்ற யுவ நீதி உள்பட காங்கிரஸ் திட்டங்களை பட்டியலிட்டார். அதில், “பட்டம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சிக்கு உத்தரவாதம் தரும் உரிமை சட்டம் கொண்டு வரப்படும். அரசு தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும். ரூ.5,000 கோடியில் நிதி திட்டம் உருவாக்கி, நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் தரப்படும்” என்று உறுதி அளித்துள்ளார்.

* வேலை தரலைனா வீட்டுக்கு போறது தானே – ப.சிதம்பரம்
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பதிவில், “வேலையில்லா பிரச்னைக்கு அரசு தீர்வு காண முடியாது என பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சொல்லி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது பாஜ அரசின் கையாலாகா தனத்தையே காட்டுகிறது. உங்களால் வேலை தர முடியாது என்றால் வீட்டுக்கு போக வேண்டியது தானே” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

The post வேலையில்லா திண்டாட்டத்தை அரசால் தீர்க்க முடியாது என்பதா? காங்கிரஸ் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: