ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் ஒரே நாளில் 11 பேர் வேட்புமனு தாக்கல்

 

ஈரோடு, மார்ச் 26: ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் நேற்று ஒரே நாளில் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 22ம் தேதி வரை 3 நாட்களில் சுயேட்சைகள் 5 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் திமுகவை சேர்ந்த கே.இ.பிரகாஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று தனது வேட்புமனுவை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கராவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதேபோல, அதிமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆற்றல் அசோக்குமார் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதுதவிர சுயேட்சை வேட்பாளர்களான தாராபுரம், எழுகாம்வலசு ஆனந்தி, தாராபுரம், ஜோதியம்பட்டி கே.கே.வடுகநாதன், ஈரோடு பெரியசேமூர் தண்டபாணி, ஈரோடு கொத்துக்காரர்தோட்டம் ஆறுமுக கண்ணன், ஈரோடு அடுத்த கிளாம்பாடி புதுவட்டக்கல்வலசு மயில்சாமி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கலியனூர் முனுசாமி, கோவை போடி திம்மாம்பாளையம் பிரபாகரன்,

ஈரோடு மோளக்கவுண்டன்பாளையம் நரேந்திரநாத், ஈரோடு மாமரத்துபாளையம் சுவாதிமுத்து ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு நேற்று ஒரே நாளில் திமுக, அதிமுக மற்றும் சுயேட்சைகள் உள்பட 11 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதுவரை, ஈரோடு தொகுதிக்கு மொத்தம் 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

The post ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் ஒரே நாளில் 11 பேர் வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: