மக்களவை தேர்தல் எதிரொலி: அரசியல் கட்சிகள் பெருமளவு பணம் செலவிடும் என்பதால் ஜிஎஸ்டி வரி அதிகரிக்க வாய்ப்பு!!

டெல்லி: மக்களவை தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் பெருமளவு பணம் செலவிடும் என்பதால் வரி வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ல் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் மொத்தம் செலவிட்ட தொகை ரூ.80,000 கோடி என கணிக்கப்பட்டது. ஆனால், நடப்பு தேர்தலில் எம்.பி. தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தலா ரூ.95,000 செலவிடலாம் என வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. வேட்பாளர் செலவிடுவதோடு அல்லாமல், அவர் சார்ந்துள்ள கட்சியும் பல கோடியை தேர்தலில் செலவிடும்.

கட்சிகள் ரூ.1லட்சம் கோடி செலவிடும் என கணிப்பு
நடப்பு மக்களவை தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து மொத்தம் ரூ.1 லட்சம் கோடி செலவிடும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்கும் தொண்டர்கள் பயன்படுத்தவும் வாகனங்கள் வாங்கவும் எரிபொருளுக்கும் கட்சிகள் செலவிடும். உணவுச் செலவு, தங்குமிடங்களுக்கு ஆகும் செலவு, நோட்டீஸ் அச்சிடும் செலவு போன்றவையும் முக்கிய செலவுகளாகும்.
கட்சிகள் தவிர, தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்த பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2014-ல் தேர்தலை நடத்த ரூ.3,870 கோடி செலவிட்ட தேர்தல் ஆணையம் 2019-ல் ரூ.4,500 கோடி செலவிட்டிருக்கும் என தகவல் வெளியாகின.

ஆனால், நடப்பு மக்களவை தேர்தலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ரூ.5,300 கோடி வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் காலத்தில் கட்சிகளால் செலவிடப்படும் பணத்தால் பொருட்கள் விற்பனையும் சேவைப் பயன்பாடும் அதிகரிக்கும். ஏப்.19-ல் தொடங்கி ஜூன் 1 வரை 44 நாட்கள் வரை மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவுக் காலம் நீள்வதும் செலவு அதிகரிக்கவும், பொருட்களின் விற்பனையும் பல்வேறு சேவைகளுக்கான தேவை உயர்வதால் ஜிஎஸ்டி வசூலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post மக்களவை தேர்தல் எதிரொலி: அரசியல் கட்சிகள் பெருமளவு பணம் செலவிடும் என்பதால் ஜிஎஸ்டி வரி அதிகரிக்க வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: