ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கு அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன்: திண்டுக்கல் கோர்ட் உத்தரவு

திண்டுக்கல்: அரசு டாக்டரிடம் ₹40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி திண்டுக்கல் கோர்ட் உத்தரவிட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் சுரேஷ் பாபுவிடம், ₹40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில், மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பலமுறை ஜாமீன் கேட்டு திண்டுக்கல் கோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், அங்கித் திவாரி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 20ம் தேதி அங்கித் திவாரிக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. மேலும் திண்டுக்கல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்று கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவு நகலுடன் அங்கித் திவாரி சார்பில் அவருடைய தந்தை ராஜேந்திரகுமார், சகோதரர் உமேஷ் ஆகியோர் திண்டுக்கல் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா, அங்கித் திவாரிக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் அங்கித் திவாரியின் பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். தமிழகத்தை விட்டு அவர் வெளியேறக் கூடாது. லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்யும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும், திண்டுக்கல்லில் தங்கியிருந்து நீதி மன்றத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தார். இதையடுத்து அங்கித் திவாரியின் பாஸ்போர்ட் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

The post ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கு அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன்: திண்டுக்கல் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: