திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கர்நாடக தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தல்

சென்னை: ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து, அதன் விவரத்தை 48 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் கர்நாடக மாநில தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தை சேர்ந்தவர்கள் வந்து, எங்கள் கர்நாடக ஓட்டலில் வெடிகுண்டு வைக்கின்றனர். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என கர்நாடகாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ. கட்சியின் ஒன்றிய அமைச்சர் ஷோபா பேசினார்.

‘கர்நாடகா குண்டு வெடிப்பு நிகழ்வில் தமிழ்நாட்டினை தொடர்புபடுத்தி பேசிய மத்திய பாஜ அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தி.மு.க. சார்பில் நேற்று தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய பா.ஜ. கட்சியைச் சேர்ந்த பாஜ அமைச்சர் ஷோபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்னஞ்சல் மூலம் புகார் கடிதம் அனுப்பினார். இந்த புகார் மீது, தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, “ஷோபா மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து, அதன் விவரத்தை 48 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என கர்நாடக மாநில தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கர்நாடக தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: