ரோடு ஷோ வெறும் தெரு நாடகங்கள் 7 கட்ட தேர்தலுக்கு பிறகு மோடி வீதிக்கு வந்து விடுவார்: லாலு பிரசாத் கடும் தாக்கு

பாட்னா: 7 கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி வீதிக்கு வந்து விடுவார் என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னா தொகுதியில் இறுதிக்கட்டமான ஜூன் 1ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கும் மோடி, பாட்னாவில் நேற்று ரோடு ஷோ நடத்தினார்.

இதுகுறித்து பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் தன் ட்விட்டர் பக்கத்தில், “பீகாரில் நலிந்து வரும் சர்க்கரை தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதாக கடந்த 2014 மக்களவை தேர்தலில் மோடி வாக்குறுதி அளித்தார். மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை, பாட்னா பல்கலைக் கழகத்துக்கு மத்திய அந்தஸ்து அளிப்பது ஆகியவற்றில் பாஜ அரசு தோல்வி அடைந்து விட்டது.

பீகார் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. கடந்த 2019 தேர்தலில் 39 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றிருந்தாலும், பீகாரில் நீண்டகாலம் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் பீகாருக்கு ஒன்றிய அரசு ஒன்றும் செய்யவில்லை. குஜராத் போன்ற மாநிலங்களே வளர்ச்சி திட்டங்கள், முதலீடுகளுக்கு விரும்பப்படும் மாநிலங்களாக உள்ளதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

பீகாருக்கு எதையும் செய்யாமல் இப்போது மோடி நடத்தும் ரோடு ஷோக்கள் வெறும் தெரு நாடகங்கள். இதனால் மாநிலத்துக்கு பெரிய நன்மைகள் கிடைக்காது. இது பீகார். 3 கட்ட தேர்தலுக்கு பின் மோடி சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். மீதமுள்ள தேர்தலுக்கு பிறகு அவர் வீதிக்கு வந்து விடுவார்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

The post ரோடு ஷோ வெறும் தெரு நாடகங்கள் 7 கட்ட தேர்தலுக்கு பிறகு மோடி வீதிக்கு வந்து விடுவார்: லாலு பிரசாத் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: