தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ செயல்பாடு நேர்மையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி : ரகசிய எண்களை வெளியிடாதது ஏன் என சரமாரி கேள்வி!!

டெல்லி : தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ செயல்பாடு நேர்மையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு கடந்த 2018ல் அறிமுகம் செய்தது. கருப்பு பணத்தை ஒழிக்க உதவும் என்ற முழக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், ஒரு கட்சிக்கு யார், யார்? நிதி கொடுத்தார்கள் என்ற விவரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆளும் பாஜ பெரிய தொழில் நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. இதனால் தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச், தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததோடு, இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி குறித்த முழு விவரத்தையும் மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட்டது.

ஆனால், பல தரவுகளை சேகரிக்க வேண்டி இருப்பதால் ஜூன் மாதம் வரை கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ மீண்டும் முறையிட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், கடந்த 12ம் தேதி தன்னிடம் உள்ள தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வழங்க வேண்டும். 15ம் தேதிக்குள் அந்த விவரங்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, எஸ்.பி.ஐ வழங்கிய 763 பக்க ஆவண தரவுகளை தேர்தல் ஆணையம் கடந்த 13ம் தேதி இணைய தளத்தில் வெளியிட்டது.இதில், கம்பெனிகள் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய தேதி, தொகை பற்றிய விவரம் தனியாகவும், அரசியல் கட்சிகள் அதை வங்கியில் சமர்ப்பித்த தேதி, தொகை விவரம் தனியாகவும் இருந்தது. எந்த கட்சிக்கு எந்த கம்பெனி நிதி கொடுத்தது என்பதை கண்டுபிடிப்பதை தடுக்க தேர்தல் பத்திரத்தின் எண் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றம் அதிருப்தி

அப்போது தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள எண்ணையும் ஏன் SBI இன்னும் தெரிவிக்கவில்லை?.உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்புப்படி பத்திர எண்களை வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும். மறைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும் SBI வெளியிட வேண்டும். தேர்தல் பத்திர வழக்கில் SBI-ன் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. தேர்தல் பத்திர வழக்கின் தீர்ப்பை செயல்படுத்துவதில் எஸ்.பி.ஐ. வங்கியின் அணுகுமுறை சரியில்லை. உச்சநீதிமன்றத்தின் முழு தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது எஸ்.பி.ஐ. வங்கியின் முழு கடமை. தேர்தல் பத்திர ரகசிய எண்ணை வெளியிடுவது தொடர்பாக மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் எஸ்.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். எந்த தரவுகளும் விடுபடவில்லை என்று எழுத்துப்பூர்வமாக எஸ்பிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.பத்திரம் வாங்கப்பட்ட தேதி, பெயர், சீரியல் எண்கள், ஆல்பா நியூமரிக் எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் வெளியிட வேண்டும். எஸ்.பி.ஐ தாக்கல் செய்ய உடன் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் ,” இவ்வாறு உத்தரவிட்டனர்.

The post தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ செயல்பாடு நேர்மையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி : ரகசிய எண்களை வெளியிடாதது ஏன் என சரமாரி கேள்வி!! appeared first on Dinakaran.

Related Stories: