கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில் பற்றி எரிகிறது காட்டுத்தீ: அணைக்க முடியாமல் வனத்துறை திணறல்

கொடைக்கானல்: கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. காட்டுத்தீ நிலவும் இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தீயை அணைப்பதில் வனத்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை காலம் துவங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதி மட்டுமின்றி வனப்பகுதியை ஒட்டியுள்ள வருவாய் மற்றும் பட்டா நிலங்களில் உள்ள மரங்கள், செடிகள், புல்வெளிகள் உள்ளிட்டவை கருகி காணப்படுகிறது. இந்த வறண்ட சூழ்நிலையில் கொடைக்கானல் கீழ்மலை, மேல்மலை பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.

நேற்று கடும் வெயில் காரணமாக கொடைக்கானல் பெருமாள்மலையை அடுத்த மஞ்சூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றியது. இதனால் அப்பகுதியில் பல ஏக்கரில் உள்ள அரிய வகை மரங்கள், செடிகள் எரிந்து கருகி வருகின்றன. மேலும் வனவிலங்குகளும் பாதிப்படைந்து இடம்பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ நிலவும் இடத்தில் வனத்துறையினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் வனத்துறையினருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நத்தம் அருகே பற்றியது காட்டுத்தீ: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கரடிகுட்டு மலையடிவாரம் புதர் பகுதியில் நேற்று மதியம் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து தீ மளமளவென பரவி பற்றி எரிய துவங்கியது. இதை கண்ட அப்பகுதியினர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் மலைப்பகுதியில் தீயணைப்பு வாகனத்தை கொண்டு செல்ல முடியாததால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள், அப்பகுதி மக்கள் உதவியுடன் பச்சை மரக்கிளையை பயன்படுத்தி காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேரம் போராடி காட்டுத்தீயை அணைத்தனர். தீயை அணைக்கப்பட்டதால் அருகிலுள்ள மா, தென்னை தோட்டம் மற்றும் விவசாய பயிர்கள் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டது.

The post கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில் பற்றி எரிகிறது காட்டுத்தீ: அணைக்க முடியாமல் வனத்துறை திணறல் appeared first on Dinakaran.

Related Stories: