திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சுழி, மார்ச் 17: திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் பங்குனி உற்சவ விழா முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சுழியில் பழமை வாய்ந்த திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோயில் பங்குனித்திருவிழா கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருச்சுழி திருமேனிநாதர் கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக சுவாமி சன்னதிக்கு முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, யாகசாலை வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த பங்குனித் திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது.மேலும், ஒவ்வொரு நாளும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். இதனையடுத்து வரும் மார்ச் 22ம் தேதி திருக்கல்யாண வைபவமும், மார்ச் 23ம் தேதி மஹா திருத் தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதற்காக,இன்று நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருமேனிநாதர் மற்றும் துணைமாலை அம்மனை தரிசித்து சென்றனர்.

The post திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: