தேர்தல் பத்திரம் முறைகேடு அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே கோரிக்கை

டெல்லி: தேர்தல் பத்திரம் முறைகேடு அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;

பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க காங். கோரிக்கை
தேர்தல் பத்திரங்கள் மூலம் எப்படி பாஜக பணம் வசூலித்துள்ளது என்பதை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்திவிட்டது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்க பாஜக அரசுதான் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ரூ.300 கோடி நிதி முடக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை எப்படி சந்திக்க முடியும்?. தேர்தல் களத்தில் கட்சிகளுக்கு இடையே சமநிலை எங்கு உள்ளது என்று மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக மட்டும் ரூ.6,600 கோடி வசூலித்துள்ளது; மற்ற கட்சிகளுக்கு சொற்ப தொகையே. பெரும் பணத்தின் மூலம் பாஜக தேர்தலை சந்திக்கும்போது மற்ற கட்சிகளுக்கு எப்படி சமவாய்ப்பு கிடைக்கும்? என்றும், பெரு நிறுவனங்களுக்கு சலுகை அளித்து தேர்தல் நிதி பெறப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் பத்திர முறைகேடு: விசாரணை தேவை
தேர்தல் பத்திர முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை முடியும் வரை பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் பல ஆயிரம் கோடியை திரட்டியுள்ளது பாஜக. காங்கிரஸ் பெற்ற நன்கொடைகள் டெபாசிட் செய்யப்பட்டிருந்த வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கி உள்ளது என்று கார்கே கூறியுள்ளார்.

தேர்தல்பத்திர முறைகேடு: மோடியை பொறுப்பாக்க வேண்டும்
தேர்தல் பத்திர முறைகேட்டுக்கு மோடியை பொறுப்பாக்க வேண்டும். வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு சோதனைக்கு ஆளானவர்கள் எல்லாம் பாஜகவில் சேர்ந்துவிடுகிறார்கள். வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மூலம் நிறுவனங்களை மிரட்டி பணம் வசூலித்துள்ளது பாஜக. பாஜகவில் சேர்ந்தவர்கள் எல்லாம் தூய்மையாகிவிடுகிறார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

 

The post தேர்தல் பத்திரம் முறைகேடு அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: