ஆஷஸ் தொடர்; 4வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றி!

மெல்போர்ன்: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இங்கிலாந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து பெற்றுள்ள இந்த வெற்றி, கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஷஸ் தொடரின் விறுவிறுப்பான 4-வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில், ஆஸ்திரேலிய பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

ஆஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்): 152 ரன்கள் (45.2 ஓவர்கள்)
இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்): 110 ரன்கள் (29.5 ஓவர்கள்)
ஆஸ்திரேலியா (இரண்டாவது இன்னிங்ஸ்): 132 ரன்கள் (34.3 ஓவர்கள்)
இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்): 178/6 (32.2 ஓவர்கள்). இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்டர்கள் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து மொத்தம் 479 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டனர். இது கடந்த 97 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியின் மிக மோசமான பேட்டிங் செயல்பாடாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்னதாக 1928-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 457 பந்துகளில் ஆஸ்திரேலியா சுருண்டதே சாதனையாக இருந்தது. தற்போது மீண்டும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்துள்ளனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி கடைசியாக 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் விளையாடிய 18 போட்டிகளில், இங்கிலாந்து 16-ல் தோல்வியடைந்து 2 போட்டிகளை மட்டுமே ‘டிரா’ செய்திருந்தது. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு (சுமார் 5,468 நாட்கள்), 175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப் பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான படை.

Related Stories: