குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை: அமித்ஷா திட்டவட்டம்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ள நிலையில், அசாம் உள்ளிட்ட நாட்டின் பிறமாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்; குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. சிஏஏ சட்டம் தொடர்பாக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.

சிஏஏ சட்டத்தைக் கண்டு சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாம் என நானே பலமுறை கூறியிருக்கிறேன். சிஏஏ குறித்து 2019ம் ஆண்டு தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். கொரோனா தொற்று காரணமாகவே சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நாட்டின் சட்டம், தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்படும் என்று கடந்த 4 ஆண்டுகளில் 41 முறை கூறியுள்ளேன். சிஏஏ சட்டம் இந்த நாட்டைச் சேர்ந்த எந்த குடிமக்களின் உரிமையையும் பறிக்காது என உறுதியளிக்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது எனக்கூற மாநிலங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

குடியுரிமை என்பது நாட்டை ஆளும் ஒன்றிய அரசின் கீழ் வருகிறது என்பதால், அதில் முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரமில்லை. எதிர்க்கட்சியினர் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்கின்றனர். தங்கள் வாக்கு வங்கியை பலப்படுத்த விரும்புகின்றன. நாட்டின் குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மைக்கான உரிமை என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; மோடி அளித்த ஒவ்வொரு வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் வாக்குறுதி மட்டுமே கொடுப்பார்கள்; ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள் என்று விமர்சனம் செய்தார்.

 

The post குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை: அமித்ஷா திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: