பஞ்சாமிர்த வாகனத்தை சிறை பிடித்த விவகாரம்: பாஜ, இந்து அமைப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நேற்று முன்தினம் பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையத்தில் இருந்து காலாதியான சுமார் 2 டன் அளவுள்ள பஞ்சாமிர்தங்கள் மினி லாரியில் ஏற்றப்பட்டு ஒட்டன்சத்திரம் தாலுகா, கள்ளிமந்தையத்தில் உள்ள கோயில் காலியிடத்தில் கொட்டி அழிப்பதற்காக எடுத்து செல்லப்பட்டது. அந்த மினி லாரியை மேற்கு கிரிவீதியில் தடுத்து நிறுத்தி இந்து அமைப்பை சேர்ந்த சிலர் சிறைபிடித்தனர்.

மேலும், கெட்டுப் போன பஞ்சாமிர்தத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கோயில் அதிகாரிகள் இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மீது, பழநி அடிவாரம் போலீசில் புகார் அளித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட இந்து அமைப்பின் நிர்வாகிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோரிடம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார்.

இந்நிலையில் அடிவாரம் போலீசார் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த செந்தில்குமார், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த பாலன், அஜித், பாஜவை சேர்ந்த குணா, வெங்கடேஷ், செல்வக்குமார் உள்பட 9 பேர் மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது, முறையற்று தடுத்தல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து 9 பேரும் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post பஞ்சாமிர்த வாகனத்தை சிறை பிடித்த விவகாரம்: பாஜ, இந்து அமைப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: