ஒழுக்கமான கட்சிக்கு பயம் ஏன்? எங்களை மிரட்டி இழுக்க பார்க்கும் பாஜ: போட்டு உடைத்த கே.பி.முனுசாமி

அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தவுடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை பிளவுப்படுத்த இந்த அரசு முயற்சி செய்கிறது என கடுமையாக ஒன்றிய அரசை விமர்சித்தார். சிஏஏ சட்டத்தை ஆதரித்த 13 எம்பி.க்கள் யார் என கூற வேண்டும். சிஏஏ சட்டம் அமல்படுத்துவதன் மூலம் எப்படியாவது மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என பாஜ செய்யக்கூடிய சந்தர்ப்பவாத அரசியல் இது.

இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பு நல்ல பாடத்தை புகட்டும். நேர்மையான, லஞ்ச, லாவண்யம் இல்லாத ஒழுக்கமான அப்பழுக்கற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் பாஜ, ஏன் தேர்தல் பத்திரத்தை உடனடியாக வெளியிட தயங்குகிறது. வங்கியில் ஒரு மணி நேரத்தில் வழங்கக்கூடிய தொழில் நுட்பங்கள் வந்துவிட்டது. இந்த சூழலில், ஜூன் மாதம் வரை அவகாசம் கேட்கிறார்கள் என்றால், அங்கு மிகப்பெரிய தவறு நடந்துள்ளது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

இவ்வாறு அவர் கூறினார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளதே என்று கேட்டதற்கு, ‘எங்களை எப்படியாவது அவர்கள் (பாஜ) பக்கம் இழுக்கலாம் என முயற்சி செய்கிறார்கள். நாங்கள் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். நாங்கள் சுயமரியாதையுடன் நின்று கொண்டிருப்பதால், எங்களை பயமுறுத்தி இழுக்கமுடியாது.

இதுபோன்ற வழக்குகள் யாரால் பதிவு செய்யப்படுகிறது என்று எங்களுக்குத் தெரியும். அதை முறையாக எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சின்னமும், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரும் இருக்கக்கூடிய சூழலில் இதுபோன்ற வழக்கு தொடுக்க ஏவி விட்டவர்களின் எண்ணம் பலிக்காது’ என்றார்.

* குஷ்புக்கு கண்டனம்
கே.பிமுனுசாமி கூறுகையில், ‘ஏழ்மை நிலையில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு கொண்டுவரக்கூடிய திட்டங்களை குஷ்பூ, பிச்சை என கூறுவதை நான் வருத்தத்துடன் கண்டிக்கிறேன். கீழ்நிலையில் இருக்கின்ற மக்களை தூக்கி விடுவதற்காக கொண்டு வரக்கூடிய திட்டங்களை விமர்ச்சிப்பது அவர்களுடைய அறியாமையை காட்டுகிறது’ என்றார்.

The post ஒழுக்கமான கட்சிக்கு பயம் ஏன்? எங்களை மிரட்டி இழுக்க பார்க்கும் பாஜ: போட்டு உடைத்த கே.பி.முனுசாமி appeared first on Dinakaran.

Related Stories: