காரைக்குடி மீனாட்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக இன்று அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடியேற்றத்துக்கு பின் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவக்கினர். இத்திருவிழா வரும் 26ம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறும். விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19ம் தேதி பக்தர்கள் கரகம், மதுக்குடம் ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வருவர். இதையொட்டி காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் மற்றும் முளைப்பாரி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் பல்வேறு அமைப்பினர் மற்றும் சமுதாயத்தினர் சார்பில் மண்டகப்படிகள் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் பாலாஜி ஆகியோர் செய்து வருகின்றனர்.

The post காரைக்குடி மீனாட்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: