தங்கசாலை வால்டாக்ஸ் சாலை பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது: 12 கிலோ கஞ்சா பறிமுதல்

தண்டையார்பேட்டை: சென்னை தங்கசாலை வால்டாக்ஸ் சாலை பகுதியில், ஏழுகிணறு ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது‌, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், மதுரை சேர்ந்த கிருஷ்ணன் (53) என்பதும் கூட்டாளிகளுடன் சேர்ந்து மதுரை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இவர் கொடுத்த தகவலின்பேரில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் (40), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தமுருகன் (37), சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் (40), மென்ஷன் உரிமையாளர் மதுரையை சேர்ந்த கனி (26), மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பணி புரியும் திருச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (39) ஆகியோரை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தார்கள், எங்கெல்லாம் விற்பனை செய்கிறார்கள், கஞ்சா விற்பனையில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தங்கசாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தங்கசாலை வால்டாக்ஸ் சாலை பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது: 12 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: