தேர்தலுக்காக காஸ் விலை குறைக்கப்படவில்லை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமையல் ஏரிவாயு விலை குறைக்கப்படவில்லை என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று காலை 10.15 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு சென்றார். அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

பிரதமர் மோடி, கடந்த ஆண்டு உஜ்வாலா யோகானா திட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்துள்ள பயனாளிகளுக்கு ரூ.200 குறைத்து, ரூ.400 மானியமாக அறிவித்தார். அதேபோல் இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மேலும் ரூ.100 குறைத்துள்ளார். எனவே தேர்தலுக்காக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுவது சரியானது அல்ல.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ், மூன்றரை கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதோடு அந்த வீடுகளுக்கான பட்டாக்கள், தாய்மார்களின், பெண்கள் பெயரில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது குறித்த மசோதா முதலாவதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

டெல்லியில் பொது மக்களுக்கு இடையூறாக சாலையின் நடுவில் தொழுகை நடத்தியதை அவர்கள் தவிர்த்திருக்கலாம். ஆனால் அதற்காக சாலையின் நடுவில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை, கால்களால் எட்டி உதைத்து அப்புறப்படுத்தியது தவறான ஒரு முன்உதாரணத்தை ஏற்படுத்தும். எனவே, சாலையின் நடுவில் தொழுகை நடத்தியதையும் தவிர்த்து இருக்கலாம். அதேபோல் அவர்களை காலால் எட்டி உதைத்து அப்புறப்படுத்தியதையும் தவிர்த்து இருக்கலாம்.

The post தேர்தலுக்காக காஸ் விலை குறைக்கப்படவில்லை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: