விழுப்புரம், சிதம்பரத்தில் மீண்டும் போட்டி: சொந்த சின்னமான பானை சின்னத்தில் வி.சி.க. போட்டியிடும் என திருமாவளவன் அறிவிப்பு


சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள், மற்ற 3 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. திமுக, வி.சி.க. இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வி.சி.க. தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டனர். கடந்த முறை போட்டியிட்ட விழுப்புரம், சிதம்பரம் தனித் தொகுதிகளில் வி.சி.க. மீண்டும் போட்டியிடுகிறது. 2019 தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிட்டு விசிக வென்றது. கடந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. தொகுதி பங்கீட்டுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; மக்களவைத் தேர்தலில் சொந்த சின்னமான பானை சின்னத்தில் வி.சி.க. போட்டியிடும். முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 4 தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டிருந்தோம். கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் கூட்டணி கட்டுக்கோப்பாகவே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 2 தொகுதிகளை ஒப்புக்கொண்டோம். அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆலோசித்து தொகுதி உடன்பாடு மேற்கொண்டுள்ளோம் இவ்வாறு கூறினார்.

 

The post விழுப்புரம், சிதம்பரத்தில் மீண்டும் போட்டி: சொந்த சின்னமான பானை சின்னத்தில் வி.சி.க. போட்டியிடும் என திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: