குலசேகரத்தில் ஒரே நாளில் 10 கடைகளை உடைத்து திருட்டு

*மர்ம நபர்கள் கைவரிசை

குலசேகரம் : குலசேகரத்தில் ஒரே நாள் இரவில் 10 கடைகளை உடைத்து திருட்டு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.குமரி மாவட்டம் குலசேகரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக பூட்டப்பட்டிருக்கும் கடைகளை இரவு நேரங்களில் உடைத்து பொருட்களை திருடி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மணியன்குழி, பிணந்தோடு, அரமன்னம் போன்ற பகுதிகளில் கடைகள் உடைக்கப்பட்டு ரப்பர் ஷீட்கள் திருடப்பட்டிருந்தன.

கடந்த வாரம் குலசேகரம் பஸ் நிலையம் அருகே தும்பக்கோடு பாலம் பகுதியில் 4 கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டன. ஆனால் இது தொடர்பாக யாரும் போலீசில் சிக்கவில்லை. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பிணந்தோடு பகுதியில் 3 கடைகள் உடைக்கப்பட்டு சிகரெட் பாக்கெட்டுகள், சில்லறை பணம் திருடப்பட்டிருந்தது. கொல்லாறை பகுதியில் ரப்பர் ஷீட் கடையை உடைத்து உள்ளே எதுவும் சிக்காததால், விலை உயர்ந்த பூட்டை எடுத்து சென்று விட்டனர்.

திருநந்திக்கரை பகுதியில் கடையின் பூட்டை உடைத்து, தேவையான பொருட்களை எடுத்துச்சென்றுள்ளனர். அதுபோல கோட்டூர்க்கோணம் பகுதியில் 4 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் மட்டும் குலசேகரம் சுற்றுவட்டார பகுதியில் 10 கடைகளை உடைத்து திருடர்கள் கைவரிசை காட்டி சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குலசேகரம் சுற்றுவட்டார பகுதிகளில் ரப்பர் ஷீட் கடைகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல திருடன் போலீசில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக வேறு கும்பல் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் குலசேகரம் போலீசார் திருடர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஒரேநாள் இரவில் 10 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது பொதுமக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குலசேகரத்தில் ஒரே நாளில் 10 கடைகளை உடைத்து திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: