புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் பேச்சு வேலூர் கலைஞர் அறிவியல் மையத்தில் பரிசளிப்பு விழா

வேலூர், மார்ச் 8: புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தவேண்டும் என்று வேலூரில் அறிவியல் தின பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் பேசினார்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கலைஞர் கருணாநிதி அறிவியல் மையத்தில் உலக அறிவியல் தினவிழா மற்றும் கணித திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட அறிவியல் மைய அலுவலர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் லெனின் தமிழ்கோவன் கலந்துகொண்டார். விழாவில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

அறிவியல் தினவிழாவையொட்டி அவர்களது ஓவியம், பேச்சு, கட்டுரை, வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கணித திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் என மொத்தம் 235 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி செயல் இயக்குனர் லெனின் தமிழ்கோவன் பேசியதாவது: மாணவர்கள் தங்களின் திறன்களை தினமும் வளர்த்துக்கொள்ள வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளில் தொடர்ந்து ஆர்வம் செலுத்த வேண்டும். தானியங்கி படிக்கட்டு (எஸ்குலேட்டர்) கண்டுபிடித்தது ஒரு மாணவன்தான். இதற்காக அவர் காப்புரிமை பெற்றதால் தொடர்ச்சியாக அவருக்கு பணம் சென்றடைகிறது. அதேபோல் லிப்ட் அறுந்து விழும்போது அசம்பாவிதம் ஏற்படாத வகையில் இருக்க பலூன்களை பொருத்தலாம் என மற்றொரு மாணவர் யோசனை ெதரிவித்து அதன் மாதிரியை மத்திய அரசிடம் காண்பித்தார். அவரது கண்டுபிடிப்பை மத்திய அரசு அங்கீகரித்து பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. மாணவர்களின் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். புத்தம் புதிய கண்டுபிடிப்புகளின் வருகையால் அறிவியல் விஞ்ஞானம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும். இதன்மூலம் மாணவர்கள் தங்கள் அறிவை மேன்மேலும் வளர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அறிவியல் மைய உதவியாளர் நெப்போலியன் வீரபாண்டியன், கேலி மெக்கானிக் கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் பேச்சு வேலூர் கலைஞர் அறிவியல் மையத்தில் பரிசளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: