போலி சாதி சான்று வழங்கிய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் உத்தரவு ஒடுகத்தூர் அடுத்த தோளப்பள்ளி ஊராட்சி தலைவருக்கு

ஒடுகத்தூர், மார்ச் 7: ஒடுகத்தூர் அருகே போலி சாதி சான்று கொடுத்து ஊராட்சி மன்ற தலைவர் வெற்றி பெற்ற விவகாரத்தில், அதனை வழங்கிய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் தெரிவித்தார். வேலூர் மாவட்டத்தில் இருந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு தொடர்ந்து வரப்பெற்ற புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் நேற்று வேலூர் வந்தார். பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

அதன்பிறகு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒடுகத்தூர் அடுத்த தோளப்பள்ளி ஊராட்சியில் போலி சான்று கொடுத்து ஊராட்சி மன்ற தலைவர் வெற்றி பெற்ற விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டேன். முன்னதாக, ஒடுகத்தூர் அடுத்த தோளப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் அளித்த மனுவில், `2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தோளப்பள்ளி ஊராட்சியானது ஆதிதிராவிடர் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால் மாற்று சமூகத்தை சேர்ந்த கல்பனா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை எதிர்த்து கலெக்டருக்கு அளித்த புகார் மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விழிக்கண் குழு மூலம் கல்பனா அளித்த சான்றிதழ் பொய் என்று நிரூபணம் ஆகியதோடு, அவர் மீது போலீசார் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, போலி சான்றிதழ் வழங்கிய அன்றைய தாசில்தார் பழனி, ஆர்ஐ சாந்தி, விஏஓ கிராம சஞ்சய்குமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி, சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமின்றி, குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post போலி சாதி சான்று வழங்கிய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் உத்தரவு ஒடுகத்தூர் அடுத்த தோளப்பள்ளி ஊராட்சி தலைவருக்கு appeared first on Dinakaran.

Related Stories: