கர்நாடக மாநிலத்தில் 10ம் வகுப்பு புத்தகத்தில் பெரியார் பாடம்: காங்கிரஸ் அரசு அதிரடி

பெங்களூரு: கர்நாடக பள்ளிக்கல்வி பாடப்புத்தகங்களில் பாஜ அரசால் செய்யப்பட்ட மாற்றங்கள் திருத்தியமைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தது. சட்டப்பேரவை தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்ததும், ஓய்வுபெற்ற வரலாறு பேராசிரியர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையில், பாடப்புத்தக திருத்த குழு அமைக்கப்பட்டது.

மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான குழு பாடப்புத்தகங்களில் செய்ய வேண்டிய திருத்தங்களை பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, கன்னட பள்ளி பாடப்புத்தகங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் 2024-2025ம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைக்கு வரும். பாஜ அரசால் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட, சந்திரசேகரா கம்பாரா, கிரிஷ் கர்னாட், தேவிதாச மாரியப்பா, அனந்தமூர்த்தி ராவ், தேவனூர் மகாதேவா ஆகியோரது பாடங்களும், செய்யுள் பாடல்களும் பாடப்புத்தகங்களில் மீண்டும் சேர்க்கப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் சமூக சீர்திருத்த மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார் மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரது பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பெரியார் பாடங்கள் பாஜ அரசால் நீக்கப்பட்ட நிலையில், பெரியார் குறித்த பாடங்கள், இப்போது 10ம் வகுப்பு வரலாறு புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

The post கர்நாடக மாநிலத்தில் 10ம் வகுப்பு புத்தகத்தில் பெரியார் பாடம்: காங்கிரஸ் அரசு அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: