மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

டெல்லி: மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 12வது லீக் போட்டியில் டெல்லி – மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பணத்துவீச்சை தேர்வு செய்தது. களமிறங்கிய டெல்லி அணி ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியை கட்ட ஆரம்பித்தது.

கேப்டன் லேனிங் மற்றும் அதிரடி பேட்டர் ஷஃபாலி வர்மா ஆகியோர் மும்பை அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டனர். டெல்லி அணி 4.3 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷஃபாலி வர்மா 28 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஆலிஸ் கேப்ஸி 19 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் கேப்டனுடன் கைகோர்த்த ரோட்ரிக்ஸ் மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தார்.

12.6 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் லேனிங் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனாலும் மறுபக்கம் விளையாடிக்கொண்டிருந்த ரோட்ரிக்ஸ் அதிரடியை நிறுத்தவில்லை.இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. ரோட்ரிக்ஸ் 33 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார்.மும்பை அணி தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக், பூஜா வஸ்த்ரகர், ஹேலி மேத்யூஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

கடின இலக்கை துரத்திய மும்பை அணி, டெல்லி அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 163 ரன்களை மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக அமன்ஜோத் கவுர் 42 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனாசென் 3 விக்கெட்டுகளையும், மரிசான் கேப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கூடுதல் தகவல்: மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை தனது ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தி வெற்றி கண்ட முதல் அணியாகியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் நேற்று நடந்த போட்டியில் மணிக்கு 132.1 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார். பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே அதிகபட்ச வேகத்தில் வீசப்பட்ட பந்தாகும்.

The post மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: