வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் – அதிகாரிகள் இன்று 7ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே இன்று 7ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. பழைய ஓய்வுதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை, தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக்கழக நிர்வாகங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த டிச.27, ஜன.3, ஜன.8 ஆகிய தினங்களில் 3 கட்டங்களாக நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படாததால் தொழிற்சங்கங்கள் கடந்த 9,10 ஆகிய 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி கடந்த ஜன.19ம், பிப்.7, பிப்.21 ஆகிய நாட்களில் 4வது, 5வது, 6வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை ஒவ்வொரு மாதமும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறி சில கோரிக்கைகளையும் அதிகாரிகள் ஏற்றனர். இதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 6ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி 7ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று மாலை 3 மணியளவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள தொழிலாளர் தனி இணை ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.

The post வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் – அதிகாரிகள் இன்று 7ம் கட்ட பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: