அரசு, தனியார் நிலங்களில் நடவு செய்ய மத்திய நாற்றங்கால் பண்ணையில் இலவச மரக்கன்றுகள் விநியோகம்

*விவசாயிகள், பொதுமக்களுக்கு அழைப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த பையனப்பள்ளி மத்திய நாற்றங்கால் பண்ணையில், பல்வேறு மரக்கன்றுகளை, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக பெற்று பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 23.7 சதவிகித வனப்பகுதியை, 33 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கோடு, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 24.9.2022ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் தொடங்கி வைத்தார்.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழும் நாட்டு மரங்களை நடுவது மற்றும் ஊக்குவிப்பது, பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும். அடுத்த 10 ஆண்டு காலத்தில் நகர்ப்புற பகுதிகள், விவசாயப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளுக்கு சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள், ஆற்று படுகைகள் மற்றும் பிற பொது நிலங்களில், பொருளாதாரம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் மர வகைகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தின் கீழ், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க, விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி, வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தை பெருக்கவும் இந்த திட்டம் உதவும்.

இந்த பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நாற்றங்கால்கள் போன்றவற்றின் மூலமாக 2.80 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சமூக காடுகள் மற்றும் வரிவாக்க சரகத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையினையொட்டி உள்ள பையனப்பள்ளியில், மத்திய நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு மகாகனி, செம்மரம், சவுக்கு, வேங்கை, ஜம்புநாவல், சில்வர் ஓக், சந்தனம், தேக்கு போன்ற மரக்கன்றுகள் வளர்த்து, நடவு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது.

இதுகுறித்து பையனப்பள்ளி மத்திய நாற்றங்கால் வனச்சரக அலுவலர் குமரவேல் கூறியதாவது: பையனப்பள்ளி மத்திய நாற்றங்கால் பண்ணையில், தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் மற்றும் முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இதனை அரசு மற்றும் தனியார் நிறுவன வளாகங்கள், விவசாய நிலங்களில் ஊடுபயிராகவோ, தொகுப்பாகவோ, வளர்ப்பு நடவாகவோ நடவு செய்து பயன்பெறலாம். போதுமான தண்ணீர் மற்றும் பாதுகாப்பு வேலி உள்ளிட்ட வசதிகள் உள்ள நிலங்களில், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உரிய ஆவணங்களை வழங்கி, தங்களது மண் தன்மைக்கேற்ப தேவையான மரக்கன்றுகள் விவரங்கள் தெரிவித்தால், வனத்துறை மூலம் இலவசமாக நடவு செய்து தரப்படும்.

நடவு செய்யப்பட்ட மரம் வளர்ப்பினால் கிடைக்கப்பெறும் வருவாயினை, முழுமையாக அனுபவிக்கக்கூடிய உரிமை நில உரிமையாளர்களுக்கு உள்ளது. மேலும், இந்த மரம் வளர்ப்பின் நிதி பலனில் அரசுக்கு பங்கு ஏதும் செலுத்த தேவையில்லை. அரசு நிலங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் நடவு செய்ய மகாகனி, ஜம்புநாவல், வேம்பு, நீர்மந்தி, இலுப்பை ஆகிய மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. எனவே, இலவசமாக மரக்கன்றுகள் வேண்டுவோர் வனச்சரக அலுவலர் குமரவேல்(94428 18363), வனவர்கள் பிரபுதயாள்(94865 99044), சண்முகசுந்தரம்(98947 98960) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு வனச்சரக அலுவலர் குமரவேல் கூறினார்.

The post அரசு, தனியார் நிலங்களில் நடவு செய்ய மத்திய நாற்றங்கால் பண்ணையில் இலவச மரக்கன்றுகள் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: