ஆறு வழிப்பாதையாக மாற்றி அமைக்க ஓஎம்ஆர் சாலையில் கட்டிடங்கள் இடித்து அகற்றம்: நெடுஞ்சாலை துறை தீவிரம்

திருப்போரூர்: ஓஎம்ஆர் சாலையை ஆறு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணிக்காக கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி வரை ஆறுவழிச்சாலையும், சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை நான்கு வழிப்பாதையும் கொண்டதாக பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது. தற்போது, சென்னை மாதவரத்தில் இருந்து சிறுசேரி மென்பொருள் பூங்கா வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஓஎம்ஆர் சாலை எனப்படும் ராஜீவ்காந்தி சாலையில் 80க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள், 20க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், 3 மருத்துவக் கல்லூரிகள், 5 பல்கலைக் கழகங்கள், ஏராளமான தனியார் பள்ளிகள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இவற்றி பணியாற்றும் தொழிலாளர்கள், அலுவலர்கள், படிக்கும் மாணவர்களுக்காக 3000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், சிறுசேரி மென்பொருள் பூங்காவில் இருந்து படூர் புறவழிச்சாலையில் இருந்து ஆறு வழிப்பாதை அமைக்க கடந்த 2006ம் ஆண்டு நில எடுப்பு மேற்கொள்ள அறிவிப்பு செய்யப்பட்டு, பட்டா நிலங்களில் குடியிருந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், சாலை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்நிலையில், படூரில் இருந்து கேளம்பாக்கம் வரை புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்து விட்டன.

இந்த சாலையை ஓஎம்ஆர் சாலையுடன் இணைக்கும்போது கூடுதல் அகலம் தேவைப்பட்டதால் ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்ட சாலைக்கான இடத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அந்த இடங்களில் குடியிருந்தவர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டு அனைத்து கட்டிடங்கள், கடைகள் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சாலை எல்லை குறித்த அளவீடு மேற்கொள்ளப்பட்டு குறியிடப்பட்டது. அனைத்து கட்டிடங்கள், கடைகள் போன்றவற்றை இடிக்கும் பணி நிறைவு பெற்றதும் 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

The post ஆறு வழிப்பாதையாக மாற்றி அமைக்க ஓஎம்ஆர் சாலையில் கட்டிடங்கள் இடித்து அகற்றம்: நெடுஞ்சாலை துறை தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: