இமாச்சல் சட்டப்பேரவை உரிமை குழு விசாரணை 7 பாஜக எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை?: 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த முயற்சி

சிம்லா: இமாச்சல் சட்டப்பேரவை உரிமை குழு விசாரணையை தொடங்கியுள்ளதால் 7 பாஜக எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை பாய வாய்ப்புள்ளது. மேலும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரசுக்கு 40 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்களும், 3 பேர் சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனர். சமீபத்தில் நடந்த ஒரு மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்ததால் சுயேச்சை ஆதரவுடன் பாஜக மாநிலங்களவை வேட்பாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்றும், அவர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி பாஜக தரப்பில் ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது.

இத்தகைய பரபரப்புகளுக்கு மத்தியில், மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு காங்கிரசைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்த குற்றத்துக்காக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நேர்ந்தால் அதில் ஏற்படும் குழப்பங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவே காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் மூத்த தலைவர்களான பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து, கட்சி மாறி வாக்களித்தற்கான தங்களது கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சமரச முயற்சிகள் பலித்தால் 6 தகுதிநீக்க எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் பதவி வழங்கப்படும். அல்லது அவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளனர். அதேநேரம் பிப்ரவரி 28 அன்று நடந்த சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அவையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்திய 15 பாஜக எம்எல்ஏக்களை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தற்போது பேரவை கூட்டத் தொடர் முடிவடைந்த நிலையில் அவையில் சலசலப்பை ஏற்படுத்திய எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பேரவை சிறப்புரிமை குழு விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், ‘ஆட்சியைக் காப்பாற்றும் வகையில் பாஜக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 பாஜக எம்எல்ஏக்களும் வரும் 10 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி சிறப்புரிமை குழு கூறியுள்ளது’ என்றார். பேரவை உரிமை குழு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் 7 பாஜக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. அவ்வாறு 7 பாஜக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், அதனை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்தை நாடவும் வாய்ப்புள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் அரசுக்கு தற்போதைக்கு ஆபத்து ஏற்படாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

The post இமாச்சல் சட்டப்பேரவை உரிமை குழு விசாரணை 7 பாஜக எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை?: 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: