மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: கோவையில் வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு மிரட்டல்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சம்..!!

கோவை: கோவையில் வடவள்ளி பகுதி அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவை வடவள்ளி அருகே சோமையம்பாளையம் பகுதியில் உள்ள பி.எஸ்.பி.பி மில்லேனியம் பள்ளி வளாகத்திலும் ஆசிரியர்களும், பள்ளி ஊழியர்களும் தேர்வுகளுக்கான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு இப்பள்ளியின் மின்னஞ்சலுக்கு வந்த இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த கோவை மாநகர காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விடிய விடிய பள்ளி வளாகம் முழுவதுமாக சோதனை நடத்தினர்.

சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. பள்ளியில் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டலினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. எனவே மாணவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என போலீஸாரும், பள்ளி நிர்வாகமும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பள்ளியில் மாணவர்களை விட வரும் பெற்றோர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடவள்ளி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த வாரம் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் PSBB பள்ளிகளுக்கு மிரட்டல் வந்த நிலையில், தற்போது மீண்டும் இப்பள்ளிக்கு மிரட்டல் வந்துள்ளதால், தேர்வை எதிர்நோக்கி உள்ள மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

The post மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: கோவையில் வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு மிரட்டல்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சம்..!! appeared first on Dinakaran.

Related Stories: