தமிழ்நாடு முழுவதும் 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம்

சென்னை:தமிழ்நாடு முழுவதும் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் நடைபெற்றது. இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை செயல்பட்டது. 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது. இதேபோல, குழந்தைகளின் வசதிக்காக நேற்று முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச்சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலமாக மருந்துகள் வழங்கப்பட்டது. சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தபட்டனர்.

தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதும் மிகவும் அவசியம். சொட்டு மருந்து போடாத குழந்தைகளுக்கு இன்று வீடு வீடாக சென்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் appeared first on Dinakaran.

Related Stories: