6,244 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்ட குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர்? ஜூன் 9ம் தேதி எழுத்து தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்ட குரூப் 4 தேர்வுக்கு கடந்த ஆண்டை போலவே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியிட்டது. அதில் விஏஓ (கிராம நிர்வாக அலுவலர்) 108 இடங்கள், பல்வேறு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர் 2,604, தட்டச்சர் 1705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, இளநிலை செயல் அலுவலர் 41, வரித்தண்டலர் 66, முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் 49, வனக்காப்பாளர் 171, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனகக்காப்பாளர் 192, வனக்காப்பாளர் 526, வனக்காவலர் 288, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் 1 இடங்கள் என 32 பதவியில் 6,244 பணி இடங்கள் நிரப்பப்படுகிறது.

அறிவிப்பு வெளியான அன்றே டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் முடிந்துள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்கள் என்று போட்டி போட்டு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் கடந்த முறை போலவே குரூப் 4 பதவிக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. இதனால், குரூப் 4 தேர்வு தேர்வு திருவிழா போல நடைபெற உள்ளது. விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை டிஎன்பிஎஸ்சி சரிபார்க்கும். தொடர்ந்து எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவலை டிஎன்பிஎஸ்சி வெளியிடும். தொடர்ந்து குரூப் 4 எழுத்து தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

The post 6,244 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்ட குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர்? ஜூன் 9ம் தேதி எழுத்து தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: