கர்நாடக அரசை கவிழ்க்க பாஜ பேரம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி: முதல்வர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க எங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி வரை தருவதாக பாரதிய ஜனதா கட்சியினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என முதல்வர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மைசூரு மாநகரில் செய்தியாளர்களிடம் முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘நாட்டில் ஏழ்மை நிலை 5 சதவீதமாக குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையில் நாட்டில் ஏழ்மை நிலை குறைந்துள்ளதா? என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைந்த பத்தாண்டுகளில் 700க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களை ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் பிற கட்சியில் இருந்து பாஜவுக்கு இழுத்துள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பாஜ முயற்சி மேற்கொண்டது. நாங்கள் எடுத்த நடவடிக்கையால் ஆட்சி பிழைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இதுவரை மக்கள் அதிகாரம் கொடுத்து பாஜ ஆட்சி அமைக்கவில்லை. தற்போது எனது தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்துடன் இயங்கி வருகிறது. அதை கவிழ்ப்பதற்கான சூழ்ச்சியை பாஜ தலைவர்கள் ரகசியமாக மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக எங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி வரை பணம் கொடுப்பதாக குதிரை பேரம் நடத்தி வருகிறார்கள். ஆனால் சுயமரியாதை உள்ள எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் பாஜ விரிக்கும் மாய வலையில் விழாமல் தன்மானத்துடன் கட்சி கொள்கை, சிந்தாந்தங்களுக்கு கட்டுப்பட்டுள்ளனர் என்றார்.

The post கர்நாடக அரசை கவிழ்க்க பாஜ பேரம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி: முதல்வர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: