மாநிலங்களுக்கு வரி பகிர்வில் பாரபட்சம் உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடி தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: வரி வருவாய் நிதியை மத்திய நிதி அமைச்சகம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். இதில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு மோடி அரசு அநீதி இழைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஒவ்வொரு முறை நிதி ஒதுக்கும்போதும், உ.பி, பீகார் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி பகிரப்படுவதும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு மிக குறைவாக நிதி ஒதுக்கப்படுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ரூ.1.42 லட்சம் கோடி வரி வருவாயை ஒன்றிய அரசு நேற்று முன்தினம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்தது. இதில், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.25,495 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ரூ.5 ஆயிரத்து 797 கோடி மட்டுமே.

இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில அரசுகளுக்கு ரூ.1,42,122 கோடிக்கு கூடுதல் தவணை வரிப் பகிர்வை விடுவிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஏற்கனவே ரூ.71,061 கோடி மாநிலங்களுக்கு வரிப்பகிர்வாக வழங்கப்பட்டது. பல்வேறு சமூக நல முன்னெடுப்புகள், அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிப்பணிகளுக்கு இந்த நிதியை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது வழங்கப்பட்டுள்ள ரூ.1.42 லட்சம் கோடியில், உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.25,495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு ரூ.5 ஆயிரத்து 797 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பீகாருக்கு ரூ.14,295 கோடி, ம.பி.க்கு ரூ.11,157 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.8978 கோடி தரப்பட்டுள்ளது. தென் மாநிலங்களை பொறுத்தவரை ஆந்திராவுக்கு ரூ.5,752 கோடி, கேரளாவுக்கு ரூ.2,736 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.2,987 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.5,183கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு மாநிலங்களுக்கு வரி வருவாய் பெருமளவில் குறைந்து விட்டது. இதனால், பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒன்றிய அரசிடம் கேட்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்படும் வரிப்பகிர்வு, மாநில நிதித் தேவைக்கு அத்தியாவசியமாக உள்ளது. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு வரி பகிர்வாக வழங்கப்படுகிறது. இதில், உ.பி., பீகார் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்படுகிறது.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், உ.பி.யில் உள்ள 80 எம்.பி. தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த மாநிலத்துக்கு மட்டும் நிதியை ஒன்றிய அரசு அள்ளிக் கொடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், மிக்ஜாம் புயல், பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு நிவாரண பணிகளுக்காக ஒன்றிய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது. உ.பி.யை விட தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாய் கிடைக்கிறது. ஆனாலும், இப்போதும் கூட தமிழ்நாட்டைவிட உ.பிக்கு சுமார் நான்கரை மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை காட்டுவதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

The post மாநிலங்களுக்கு வரி பகிர்வில் பாரபட்சம் உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடி தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: