தஞ்சாவூரில் கலெக்டர் தலைமையில் குறைதீர்கூட்டம்

தஞ்சாவூர், பிப். 29:தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் ஈஸ்வர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:ராயமுண்டான்பட்டி ஜீவகுமார்:தூர் வாரும் பணிகளை அனைத்து பகுதிகளிலும் செய்ய வேண்டும். குறிப்பாக, கல்லணை தலைப்பு பகுதியில் செய்தால்தான் கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் சென்றடையும். செங்கிப்பட்டி பகுதிக்கு காவிரி நீர் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

சுந்தர விமலநாதன்:இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் விருதுகள் வழங்கப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதை தஞ்சை மாவட்ட இயற்கை விவசாயி சித்தர் பெற்றுள்ளது விவசாயிகள் மத்தியில் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.நஞ்சில்லா உணவுகள் சாப்பிடுவதற்கு காரணமாக இருந்த இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நம்மாழ்வார் பிறந்த ஊரில் அவருக்கு மணிமண்டபம் கட்ட கலெக்டர் வாயிலாக கோரிக்கை விடுக்கிறோம். மேலும் நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்யம்பேட்டை முகமது இப்ராஹிம்:மேகதாட்டு அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வோம். எனவே, மேகதாட்டு அணை கட்டும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.

சிவவிடுதி கே.ஆர். ராமசாமி:விவசாயிகளிடமிருந்து நிலக்கடலையை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். எனவே, நெல் கொள்முதலைப் போல அரசே நேரடியாக நிலக்கடலையையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

பெரமூர் அறிவழகன் :மது பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டித்தர வேண்டும். விதை பண்ணை விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும் விலை வெளிமார்க்கெட் விலையை விட குறைவாக உள்ளது. எனவே விஜய் பண்ணை விவசாயிகளின் கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும்.

ஒரத்தநாடு புண்ணியமூர்த்தி;பாச்சூர் ஊராட்சிக்கு சொந்தமான சுமார் 20 ஏக்கர் உள்ள ஓடைக்குளம் பாண்டிச்சேரி அயன் குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி வரத்து வாய்க்கால் வடிகால் வாய்க்கால்கள் கரைகளை அமைத்துத் தர வேண்டும். கோடைப் பருவ நெல் சாகுபடி சுமார் 50,000 ஏக்கரில் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர் எனவே குறைந்தது நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் :பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும்போது அந்த தொகையை வரா கடனுக்கு வரவு வைக்கக் கூடாது.

கூட்டுறவு வங்கியில் வழங்கும் பயிர் கடனுக்கு திருப்பி செலுத்தும் காலம் நெல்லுக்கு எட்டு மாதம் ஆகும் அதனை ஓராண்டு என உயர்த்திக் கொடுக்க வேண்டும். கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். அத்துடன் மின்மாற்றிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.

மின்சாரம் தொடர்பான விவசாயிகளின் கேள்விகளுக்கு மின்வாரிய மேற்பார்வையாளர் (பொ) பி.விமலா பதில் அளித்து பேசியதாவது: தற்போது டிரான்ஸ்பார்மர் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர் புதிதாக அமைக்கும் பணிகள் நடக்கிறது தற்போது 16 மணி நேரத்தில் இருந்து 18 மணி நேரம் வரை தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. எனவே மின்தடை ஏற்பட வாய்ப்பு இருக்காது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தின் போது தோட்டக்கலை துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு நடமாடும் காய்கறி வண்டியை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

The post தஞ்சாவூரில் கலெக்டர் தலைமையில் குறைதீர்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: