விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: 137 பேர் மீது வழக்குப்பதிவு

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 137 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். காஞ்சிபுரம் அருகே பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை ஏதும் இருப்பின் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் நில எடுப்புக்கான மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து காரை அருகே உள்ள நிலம் எடுப்பு அலுவலகத்துக்கு பேரணியாக வந்து முற்றுகையிட முடிவு செய்தனர். இந்த போராட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, டிராக்டரில் ஊர்வலமாக செல்ல கிராம மக்கள், நேற்று முன்தினம் ஏகனாபுரம் அருகே 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூடினர். அப்போது போலீசார், அவர்களை தடுத்து கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், 137 பேரை கைது செய்த சுங்குவார்சத்திரம் போலீசார், அவர்கள் மீது சட்ட விரோதமாக கூட்டம் கூடுவது, அரசாங்க ஊழியரை பணி செய்யவிடாமல் தடுப்பது அரசு ஊழியர் உத்தரவை மீறுவது என 3 பிரிவின் கீழ் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: 137 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: